பதிவு செய்த நாள்
13
மார்
2015
12:03
மதுரா: உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் ஒன்றை கட்டிய, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த கிராம தலைவருக்கு, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு, பாராட்டு விழா நடத்த உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ளது, சாகர் கிராமம். இந்த கிராமத்தின் தலைவர், அஜ்மல் அலி ஷேக். இந்த கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள், வழிபாடு நடத்த வேண்டுமெனில், 4 கி.மீ., துாரத்தில் உள்ள மற்றொரு கிராம கோவிலுக்குத் தான் செல்ல வேண்டியிருந்தது. இதை எண்ணிய அஜ்மல் அலி, கிராமத்திலேயே கோவில் ஒன்றை கட்டினார். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்து பெண்கள் தங்கள் சொந்த கிராமத்திலேயே வழிபாடு நடத்த வேண்டும் என்பதற்காகவும், கோவிலை கட்டினேன் என, அவர் கூறியுள்ளார். அஜ்மல் அலி ஷேக்கின் செயலை வரவேற்றுள்ள, முதல்வர் அகிலேஷ் யாதவ், அவருக்கு பாராட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.