பதிவு செய்த நாள்
17
மார்
2015
11:03
சென்னிமலை: சென்னிமலை அருகே நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில், புஞ்சை பாலத்தொழுவு, குளக்கரையில் சுயம்புவாய் தோன்றிய நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதம் வரும் திங்கள் கிழமைகளில் இக்கோவிலுக்கு, சென்னிமலை மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், காங்கேயம், திருப்பூர், பெருந்துறை பகுதியில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது போல், இப்பகுதியில் பங்குனி திங்கள் கிழமை, நஞ்சுண்ட ஈஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இங்கு எழுந்தருளியுள்ள ஈஸ்வரர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.நேற்று பங்குனி மாதப்பிறப்பின் முதல் திங்கள்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை, 2 மணிக்கு கண்ணன் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனை நடந்தது. பின், பக்தர்கள் கூட்டம் வர துவங்கியது.கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் வசதிக்காக பந்தல் அமைத்திருந்தனர். அதையும் தாண்டி கூட்டம் வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாது, பக்தர்கள் மூன்று மணி நேரத்துக்கும் மேல், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் வெள்ளரி காய்களை, பக்தர்கள் வாங்கி சென்றனர். கோவில் வளாகத்தில், வெள்ளரிகாய் கடைகள், அதிகமாக அமைக்கப்பட்டிருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னிமலை, ஊத்துக்குளியில் இருந்தும், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.