பதிவு செய்த நாள்
17
மார்
2015
11:03
சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 11 மணிக்கு நவசக்திஹோமம், மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. இரவு 10:05 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 30 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை தினமும் இரவு 10 மணிக்கு சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடக்கும்.
பொங்கல் வைபவம்: ஏழாம் நாளான ஏப்ரல் 5ம் தேதி பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்துவர். ஏப்ரல் 6 இரவு 7:15 மணிக்கு மின் ரதத்தில் அம்மன் பவனி வருவார். ஏப்ரல் 7ல் பால்குடம், ஊஞ்சல் உற்சவம், இரவு 10:15 மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். ஏப்ரல் 8 இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் தலைமையில் ஏற்பாட்டை செய்து வருகின்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா குறித்த ஆலோசனை கூட்டம், சிவகங்கையில் நடந்தது. கலெக்டர் முனுசாமி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., இளங்கோ, இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் எஸ்.செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூடுதல் எஸ்.பி., வந்திதா பாண்டே, ஆர்.டி.ஓ., சந்தோஷினி சந்திரா, அறநிலைய உதவி கமிஷனர் ரோசாலி சுமதா, உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் குருநாதன், பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார், தாயமங்கலம் ஊராட்சி தலைவர் வசந்தாமுத்து உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.