பதிவு செய்த நாள்
18
மார்
2015
11:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் பூச்சாட்டுதலுடன் குண்டம் மற்றும் தேர் திருவிழா நேற்று துவங்கியது.ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களாக பெரிய மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், நடு மாரியம்மன் கோவில்களில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா பூச்சாட்டுதலுடன் நேற்று இரவு துவங்கியது. அடுத்த மாதம், 4ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.இதற்கு கிராம மற்றும் வனதேவதைகள், காவல் தெய்வங்கள் அனுக்கிரகம் செய்து, முன் நின்று விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி, நடத்தி கொடுக்க வேண்டும் என்று, கருவறையில் உள்ள ஸ்வாமிகளை மட்டுமின்றி, கிராம தேவதைகள், காவல் தெய்வங்களை வணங்கி, பல்வேறு வகையான பூக்களால் மாரியம்மனை அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது.முன்னதாக கோவில் தல விருட்சத்தில், கோவில் தலைமை பூசாரி வேண்டி, அம்மனை கோவில் கருவறைக்கு அழைத்து வந்தார். அதன் பின், பூச்சாட்டுதல் நடந்தது. அம்மனின் அருளாசி பெற்ற பின், பூச்சாட்டுதல் நடந்தது.பெரிய மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதலை முன்னிட்டு ஆண், பெண் பக்தர்கள் ஏராளமானோர் கோவில்கள் முன் குவிந்தனர். பல வகை மலர்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வாழை, தென்னை மரங்களை கொண்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. மாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர். வரும், 21ம் தேதி இரவு கம்பம் நடும் விழா நடக்கிறது.