பதிவு செய்த நாள்
18
மார்
2015
11:03
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழாவில், கேளிக்கை மற்றும் விளையாட்டு சாதனங்கள் அமைப்பதற்கான தொகையை, குறைக்க வலியுறுத்தி, ஏலதாரர்கள், சிண்டிகேட் அமைத்து ஏலத்தை புறக்கணித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவிலில், பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா, வரும் 24ம் தேதி, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. திருவிழாவையொட்டி, வருவாய்த்துறைக்கு சொந்தமான, குட்டை திடல் மைதானத்தில், கேளிக்கை மற்றும் விளையாட்டு சாதனங்கள் அமைக்க, ஏலம் விடப்படும். ஒரு ஏக்கர் பரப்புள்ள மைதானம், கடந்தாண்டு, 39 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய்க்கு, ஏலம் விடப்பட்டது.இந்தாண்டுக்கான ஏலம், நேற்று காலை, உடுமலை தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் சைபூதீன் தலைமையில் துவங்கியது. ஏலத்தில் பங்கேற்க, 42 ஏலதாரர்கள், தலா, 25 ஆயிரம் ரூபாய், முன்வைப்பு தொகை செலுத்தியிருந்தனர். ஏலம் துவங்கியதும், விதிகளின் படி, கடந்தாண்டை விட, 10 சதவீதம் தொகை உயர்த்தப்பட்டு, 43 லட்சத்து 6 ஆயிரத்து, 500 ரூபாயாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. இத்தொகைக்கு ஏலதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால், விதிகளின்படி, 10 சதவீதம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே, ஏலத்தை புறக்கணித்து, 42 ஏலதாரர்களும் வெளியேறினர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகளிடம், ஏல தொகையை குறைக்க கோரி, மனு அளித்தனர். மாரியம்மன் கோவில் திருவிழா, குட்டை திடல் ஏலத்தில், இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகரித்துள்ளது. இது பற்றி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு, புகார் மனு அனுப்பியுள்ளனர்.