பதிவு செய்த நாள்
21
மார்
2015
12:03
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.ஆனைமலையில் உள்ள புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு, சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், தினந்தோறும் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு அமாவாசைக்கும், வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்கள் வசதிக்காக அமாவாசைக்கு முதல் நாளிலிருந்து, கோவில் நடை மூடப்படாமல், இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். நேற்று வெள்ளிக்கிழமையில் அமாவாசை வந்ததால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாசாணியம்மனின் உற்சவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று காலை, 6:00 மணிக்கு பால் பூஜையுடன் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் நடந்தது. கோவிலின் உள்ளே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது, இதையடுத்து கோவிலின் ஆர்ச் பகுதி வரை வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறையினர் சிறப்பு பஸ்களை இயக்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் ஏரளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை, மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.