பதிவு செய்த நாள்
21
மார்
2015
12:03
பழநி: பழநிமலைக்கோயில் பிரசாத ஸ்டாலில் பத்து ரூபாய் லட்டு, முறுக்கு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பழநிமலைக்கோயிலில் ஒப்பந்ததாரர் மூலம் தயாரிக்கப்படும் லட்டு, அதிசரம், முறுக்கு, பேரீச்சம்பழம், விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவை விற்கப்படுகிறது. மஞ்சள், குங்குமம், கயிறு அடங்கிய பாக்கெட் ரூ.10 எனவும், பொங்கல், புளியோதரை உட்பட அனைத்தும் சேர்த்து ரூ.100க்கும் விற்கப்படுகிறது. இந்த பிரசாதங்களில் 25கிராம் முறுக்கு ரூ.10க்கும், 50கிராம் லட்டு ரூ.10க்கும் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டனர். இவற்றையே அதிகளவு பக்தர்கள் வாங்கிச் செல்வர். தற்போது 100கிராம் உள்ள 2 லட்டுகளை ரூ.40க்கு விற்பதால், நடுத்தர பக்தர்கள் பிரசாதம் வாங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 2014 ஜூன் வரை ரூ.75க்கு விற்கப்பட்ட பிரசாத செட் தற்போது ரூ.100க்கு விற்கப்படுகிறது. அதனை மாற்றி சாதாரண வசதியுள்ள பக்தர்கள் வசதிக்காக தலா ரூ.10 மதிப்புள்ள பொங்கல், புளியோதரை, லட்டு, முறுக்கு, விபூதி, குங்குமம் கயிறு அடங்கிய பாக்கெட் அடங்கிய பிரசாத செட்டை ரூ.50க்கு விற்க வேண்டும். பிரசாதத்தில் தயாரிப்பு, காலாவதி நாள் குறிப்பிட வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரசாத செட் ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கண்டிப்பாக ரூ.10க்கு லட்டு, முறுக்கு விற்க வேண்டும். நைவேத்ய பிரசாதம் என்பதால் தயாரிப்பு, காலாவதி நாள் குறிப்பிடுவது இல்லை. அன்றன்று தயாராகும் பொங்கல், புளியோதரை தான் விற்கப்படுகிறது. தரமில்லை, விலை அதிகமாக விற்கப்படுகிறது என புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சனை செட் போல கோயில் நிர்வாகம் மூலம் நைவேத்ய பிரசாதம் விற்பனை செய்யவும் எதிர்கால திட்டம் உள்ளது, என்றார்.