பதிவு செய்த நாள்
25
மார்
2015
12:03
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா, ஏப்ரல், 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய ஸ்தலங்களில் சென்னிமலை மலை மீது அமைந்துள்ள முருகன் கோவிலும் ஒன்று. இம்மலை கோவிலில் தான், பால தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அருணகிரி நாதரும், திருப்புகழில் சென்னிமலை முருகப்பெருமானை துதித்து, ஐந்து பாடல்கள் பாடி உள்ளார். வேறு எந்த முருகன் கோவிலும் இல்லாத சிறப்பாக இங்கு, தினமும் முருப்பெருமானுக்கு எருதுகள் மூலம், 1,320 படிகள் வழியாக, திருமஞ்சனம் கொண்டு செல்வது போன்ற அநேக அதிசயங்கள் உள்ளன.மேலும், 18 சித்தர்களில் ஒருவரான புன்னாக்கு சித்தர் வாழ்ந்து முக்கியடைந்த திருத்தலம், இக்கோவிலாகம்.இங்கு முருகனுக்கு தைப்பூசதேர். பங்குனி உத்திர தேர் என இரண்டு திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் வரும், 31ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. ஏப்., 1ம் தேதி கொடியேற்றமும், 2ம் தேதி இரவு திருக்கல்யாணம், 3ம் தேதி காலை, 5.30 மணிக்கு ரதாரோகண காட்சியும், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை, 7 மணி முதல் தேவஸ்தான மண்டபத்தில், அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பில் அன்னதானம் நடக்கிறது. அன்று மாலை, 5 மணிக்கு தேர் நிலை சேரும். வரும், 4ம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி, 5ம் தேதி காலை, 8 மணிக்கு மகாதரிசனம் நிகழ்ச்சியும், இரவு, 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை உதவி ஆணையார் சபர்மதி, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தலைமை எழுத்தர் ராஜீ, ஸ்ரீபூசாரி வேளாளத்தம்பிரான் கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.