பதிவு செய்த நாள்
16
ஏப்
2015
12:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோவில்களில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்திரை முதல் தேதியான நேற்றுமுன்தினம், தமிழ் ஆண்டு பிறப்பு கொண்டாடப்பட்டது. புத்தாண்டை வரவேற்க, பொள்ளாச்சி பகுதி மக்கள் காலை முதலே கோவில்களில் குவிந்தனர். சுப்பிரமணியர் கோவில், ஐயப்பன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு மற்றும் சித்திரை கனி சிறப்பு பூஜை ஆராதனைகள் நடந்தன. சுவாமிக்கு பக்தர்கள் கனிகள் படைத்து, இந்தாண்டு முழுக்க இனிமையாக அமைய வேண்டுமென வேண்டிக்கொண்டனர். சிலர், கடவுளுக்கு கனகாபிஷேகம் செய்வித்தனர். சுவாமிக்கு படைக்கப்பட்ட கனி வகைகள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் சித்திரை கனியை முன்னிட்டும், தமிழ்புத்தாண்டை ஒட்டியும், வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்தும், இதனைத் தொடர்ந்து ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வேலாயுதசாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் ஆகியோர் செய்தனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பெரியகளந்தை ஆதீஸ்வரன், அரசம்பாளையம் திருநீலகண்டர், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில்களிலும் சிவனுக்கும், முருகனுக்கும் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது.