பதிவு செய்த நாள்
21
ஏப்
2015
12:04
வாலாஜாபாத்: ஊத்துக்காடு எல்லம்மன் கோவிலில், பார்வேட்டை உற்சவம் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவத் திருவிழாவில், பார்வேட்டை உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 10ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து, எல்லம்மன் உற்சவர், பல்வேறு அலங்காரத்தில், சூரியபிரபை, சந்திரபிரபை, நாகம், பூதம், அன்னம், யானை, கிண்ணி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் 10வது நாளான நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில், எல்லம்மன் தெப்பக்குளத்தை வலம் வந்தார்.இரவு 10:30 மணி அளவில், ஊத்துக்காடு எல்லம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பார்வேட்டை உற்சவத்திற்கு புறப்பட்டு சென்றார். அதன் பின் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள், அம்மனுக்கு பொங்கலிட்டும்; வேப்பிலை ஆடை அணிந்தும் நேர்த்திக் கடன் செலுத்தி வணங்கி சென்றனர்.
தெப்போற்சவம்: வாலாஜாபாத் அடுத்த, நத்தாநல்லுார் கிராமத்தில், தேவி எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, தெப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணி அளவில், நத்தாநல்லுார் தேவி எல்லம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில், மேளம், தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, தெப்பலில் எழுந்தருளினார். தெப்பத்தை மூன்று முறையாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நத்தாநல்லுார் கிராமத்தை சுற்றியுள்ள, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், தேவி எல்லம்மனை வணங்கி சென்றனர்.