காரைக்கால் : காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவிற்காக பந்தல் அமைக்கும் பணி துவங்கியது. காரைக்கால் பாரதியார் வீதியில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இவ்வாண்டு திருவிழா வரும் 12ம் தேதி விக்னேஸ்வர பூஜை, பரமதத்த செட்டியார் ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 13ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம், 14ம் தேதி சிவபெருமான் அடியார் வேடத்தில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சியில் மாங்கனி இறைக்கும் மாங்கனி திருவிழா நடக்கிறது. மாலை அமுது படைத்தல் நடக்கிறது. 15ம் தேதி காரைக்கால் அம்மையார் திருவிரட்டை மணிமாலை பாடிக்கொண்டே கயிலாயத்திற்குச் செல்லுதல், அம்மையாருக்கு முக்தியளித்து திரு வீதி உலா நடக்கிறது. மாங்கனி திருவிழாவின்போது கோவில் உள்ள பாரதியார் வீதியில் ஒரு மாதத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்படும். வீதி முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டு வணிக கடைகள் அமைக்கப்படும். இதற்கான பந்தல் அமைக்கும் பணி தற்போது வேகமாக நடந்த வருகிறது.