பதிவு செய்த நாள்
30
ஜூன்
2011
11:06
அந்தியூர்: அந்தியூர் அருகே பட்லூரில் அமைந்துள்ள பழமையான கரிய காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அந்தியூர் அருகே உள்ள பட்லூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கரியகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, ஜூன் 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா துவங்கியது. தொடர்ந்து கரியகாளியம்மன், பெருமாள், ஈஸ்வரன் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. குண்டம் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் 40 அடி நீள குண்டம் அமைக்கப்பட்டு கெட்டிக்கப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு அம்மை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்க அம்மனிடம் வாக்கு கேட்கப்பட்டது. அம்மன் வாக்கு கொடுத்ததும் கோவில் பூசாரி பூக்குழி இறங்கி துவக்கி வைத்தார். அதன்பின், ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், மாணவ, மாணவியர் என நூற்றுக்கணக்கானோர் பூக்குழி இறங்கினர். வேண்டுதல் நிறைவேறியதற்காகவும், வேண்டுதல் நிறைவேறவும் ஆண்களும், பெண்களும் கைக்குழந்தையுடன் குண்டம் மிதித்து பரவசத்தில் ஆழ்த்தினர். திருவிழாவில், பட்லூர், நால்ரோடு, பூசாரியூர், உள்ளிட்ட 18 ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு நடக்கிறது.