பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
உடுமலை : உடுமலை அருகே மறையூர், கோவில்கடவு மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று காலை, துவங்கியது; நாளை நிறைவடைகிறது. கேரள மாநிலம், மறையூர், கோவில்கடவு, அஞ்சுநாடு பகுதியில் அமைந்துள்ளது, மாரியம்மன், காளியம்மன் மற்றும் கருப்பசாமி கோவில். இக்கோவில் திருவிழா, கடந்த 21ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடிஏற்றுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு, அலங்காரம், பூஜை நடக்கிறது.நேற்று காலை, 5:00 மணிக்கு, தென்காசிநாதன் கோவிலில் இருந்து, நையாண்டி மேளத்துடன், அம்மனுக்கு தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு தீர்த்த அபிேஷகம், விநாயகர் பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, தென்காசிநாதன் கோவிலில் இருந்து கும்பம் எடுத்துவரப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, முளைப்பாரி எடுத்தலும், 8:00 மணிக்கு, விவசாயப்பொருட்கள், ஆடு, மாடு, கோழிகள் ஏலம் விடப்பட்டன. இரவு, 10:00 மணிக்கு, பக்தர்கள் குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்; கோவில் பூசாரி ராஜூ தலைமை வகித்தார்.இன்று காலை, 5:00 மணிக்கு, பால் குடம் எடுத்து வருதலும், 6:00 மணிக்கு, அம்மனுக்கு பால், தேன், இளநீர் அபிேஷகமும், 7:00 மணிக்கு, தென்காசிநாதன் கோவிலில் இருந்து அக்னி சட்டி எடுத்து வருதலும், நடக்கிறது.காலை, 8:00 மணிக்கு, பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் அழகு குத்தியும் ஊர்வலமாக வருகின்றனர்.காலை, 9:00 மணிக்கு, பொங்கல் வைத்தலும், மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மதியம், 1:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, அம்மன் பூஞ்சோலை சென்றடைகிறார்.திருவிழா நிறைவு நாளான நாளை, காலை முதல் மாலை வரை, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.