குஜராத் மாநிலம், சோம்நாத் திருத்தலத்துக்கு அருகில் உள்ளது பிரபாச தீர்த்தம். கிருஷ்ண அவதாரம் முடிவுறும் தருணத்தில், பகவான் இந்த தீர்த்த தலத்துக்கு வந்து, தன்னுடைய பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செவ்வனே செய்து முடித்ததாகவும், அதன் பிறகே பகவான் வைகுண்டம் அடைந்ததாகவும் தலபுராணம் சொல்கிறது. கபிலா, ஹிரண், சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் இந்த புண்ணிய சங்கமம், அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு நிகராகப் போற்றப்படுகிறது. அர்ஜுனனும் இந்தத் தலத்தில்தான் கிருஷ்ணருக்குக் காரியம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இதன் கரையில் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவது விசேஷம்! இதனால் நம் முன்னோர் மோட்சப் பிராப்தி அடைவதுடன், நமது சந்ததியையும் வாழ்வாங்கு வாழ வைப்பர் என்பது நம்பிக்கை. ஆடி, தை மற்றும் மஹாளயபட்ச அமாவாசை தருணங்களில் எண்ணற்ற பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, முன்னோர் கடனை நிறைவேற்றிச் செல்கிறார்கள். ரயிலில் பயணித்து குஜராத் மாநிலம், சோம்நாத்-வேராவெல் எனும் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் பிரபாச க்ஷேத்திரத்தை அடையலாம்.