பதிவு செய்த நாள்
18
மே
2015
12:05
உடுமலை : உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது திருமூர்த்திமலை. இப்பகுதியில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவிலை ஒட்டியுள்ள மலைப்பகுதியில், பஞ்சலிங்க அருவி உள்ளது.அருவிக்கு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொட்டையாறு, கிழவன் ஆறு, வள்ளி ஆறு, தோணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. அருவியில் இருந்து விழும் நீர், அமணலிங்கேஸ்வரர் கோவிலை ஒட்டி செல்லும் பாலாற்றின் வழியாக, திருமூர்த்தி அணைக்கு செல்கிறது. இந்நிலையில், நேற்று மதியம் மலைப்பகுதி மட்டுமின்றி, அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியிலும், கனமழை பெய்தது. இதனால், அருவியில் நீர் அதிகளவில் கொட்டியது; நீர் பாலாற்றில் கரைபுரண்டு ஓடி, அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது. சுமார் இரண்டு மணி நேரத்துக்குப்பின், கோவில் சன்னதி மற்றும் பிரகாரத்தில் நீர் வடிந்தது.