பதிவு செய்த நாள்
18
மே
2015
12:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு ராமானுஜர் கோவிலுக்கு அனுஷ்டான குள உற்சவத்திற்காக, காஞ்சி வரதராஜ பெருமாள் வந்து செல்லும் வழி அடைக்கப்பட்டதால், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழக்கம் தடைபடுமோ என, பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி மாதம் அனுஷ்டான குளம் உற்சவம் நடைபெறும். இதற்காக ஆண்டுக்கு ஒருமுறை, காஞ்சி வரதராஜ பெருமாள், செவிலிமேடு அருகே உள்ள, சதாசிவம் நகர் வழியாக, ராமானுஜர் கோவிலில் எழுந்தருள்வார். அங்கு சிறப்பு பூஜைக்கு பின், மாலையில் அதே வழியில் கோவிலுக்கு திரும்புவார். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. தவிர, செவிலிமேடு காலனி, இந்திரா நகர், மேட்டு காலனி போன்ற பகுதிவாசிகள், இந்த வழியாக காமாட்சி அம்மன் காலனி, சின்ன காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், சதாசிவம் நகரில் கால்வாய் அருகே உள்ள பாதையை மறித்து, கடந்த மாதம் சுவர் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்து உள்ளனர். எனினும், இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரதராஜ பெருமாள் சென்று வந்த இந்த பாதை, திடீரென அடைக்கப்பட்டதால், இனி வரும் காலங்களில், வரதராஜ பெருமாள் சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தம் எனக் கூறப்படும் இந்த நிலம் மீது, வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வருவாய் துறை அலுவலரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து பார்த்த பின் தான், நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.