பதிவு செய்த நாள்
05
ஜூலை
2011
12:07
சிவகிரி : வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி (அர்த்தநாரீஸ்வரர்) கோயிலில் மகா கும்பாபிஷேகம், புதிய தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடந்தது. வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயிலில் சிவனும், சக்தியும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் சிவன், அம்மையுடன் இணைந்து ஒருபாதி பெண்ணாகவும், மற்றொரு பாதி ஆணாகவும் அர்த்தநாரீஸ்வரராக தோன்றி காட்சியளிக்கிறார். பழமையும், பெருமையும் வாய்ந்த இக்கோயிலை பராக்கிரமபாண்டியன் கட்டியதாக புராணங்கள் கூறுகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய தேர், நீராழி மண்டபத்துடன் கூடிய தெப்பம், ராஜகோபுரம், சுவாமி விமானம், ஐயப்பன், பைரவர், மகப்பேறு மண்டபம், சாலைக்கோபுரம் மற்றும் பல்வேறு திருப்பணிகள் நடந்தது. கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 23ம் தேதி பூஜைகளுடன் தொடங்கியது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. 6.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 6.45 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்கள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது. தொடர்ந்து மூலவர் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பிள்ளையார்பட்டி வேதஆகம பாடசாலை முதல்வர் பிச்சை குருக்கள், கோயில் அர்ச்சகர் மகேஷ்பட்டர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. தங்கப்பழம் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் காலை 9.30 மணிக்கு நடந்தது. இந்த அழகிய தேரினை தங்கப்பழம் முருகேசன், தங்கமுருகன், ஈரோடு தொழிலதிபர் தேவராஜன், வாசு., எம்.எல்.ஏ.,டாக்டர் துரையப்பா, மூத்த வக்கீல் கதிர்வேல், வாசு., ஆறுமுகநாடார் ஆகியோர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். 9.45 மணியளவில் துவங்கிய தேர் வெள்ளோட்டம் நான்கு ரதவீதிகள் வழியாக சென்று 11.30 மணியளவில் கோயில் முன் நிலை நிறுத்தப்பட்டது.
விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன், சட்டத்துறை அமைச்சர் சுப்பையா, தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கருப்பசாமி, எம்.எல்.ஏ.,துரையப்பா, வாசு., டவுன் பஞ்.,தலைவர் தவமணி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் புகழேந்திரன், வாசு., செயல் அலுவலர் சுந்தர்ராஜன், புளியங்குடி சரக இந்துஅறநிலையத்துறை ஆய்வாளர் ராமசாமி, செயல் அலுவலர் முருகேசன், பேரறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதியார் கல்லூரி நிறுவனர் பேராசிரியர் ராமையா, வாசு., நாடார் உறவின்முறை கல்வி கமிட்டியினர், காமராஜர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, நாடார் உறவின் முறை துவக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள், புளியங்குடி பத்திர எழுத்தர் வைகுண்டமணி, மகேந்திரா அன்கோ எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர், ஜெயலட்சுமி மார்பிள்ஸ் உரிமையாளர், வாசு., கார்த்திகை சங்கம் தலைவர் சவுந்திரராஜன், செயலாளர் சீமைத்துரை, பொருளாளர் ஆறுமுகம், 13வது வார்டு உறுப்பினர் சுரேஷ் டெய்லர், அய்யாசாமி, புளியங்குடி சுந்தரமகாலிங்கம்பிள்ளை, சண்முகவடிவு மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், சமுதாய நிர்வாகிகள், டவுன் பஞ்.,துணைத் தலைவர் திருமலைவேல் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொழிலதிபர் தங்கப்பழம், ஈரோடு தொழிலதிபர் தேவராஜன், மகேந்திரன் ஆகியோர் சார்பில் காலை 7 மணி முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கரன்கோவில், புளியங்குடி டிஎஸ்பிக்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.