பதிவு செய்த நாள்
05
ஜூலை
2011
12:07
திருப்பூர் : இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, திருப்பூர் அலகுமலை பகுதியில் சிலைகள் வடிவமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன. இதில், சிவலிங்கம் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் வகையிலான சிலை, மிகவும் சிரத்தை எடுத்து தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆயிரக்கணக்கான சிலைகளை பிரதிஷ்டை செய்து, பிரமாண்டமாக விசர்ஜன ஊர்வலம் நடத்தி, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இவ்வாண்டு வரும் செப்., 1ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, சிலை வடிவமைப்பு பணி துவங்கியுள்ளது.விழுப்புரத்தை சேர்ந்த காமதேனு கைவினை தொழிலகம் சார்பில், ஒன்றரை அடி, 3.5 அடி, 5.5 அடி, 7.5 அடி, ஒன்பது அடி மற்றும் 11.5 அடி உயரங்களில் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில், மண் சிலைகளையும், "பிளாஸ்டோ பாரீஸ் சிலைகளும் பயன் படுத்தப்பட்டன. நீர் நிலைகளில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தற்போது கல்மாவு மற்றும் குச்சிகிழங்கு மாவு கலவையில், உறுதியான சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. விருதாசலம் பகுதியில் கற்களை தூளாக்கி தயாரிக்கப்படும் கல்மாவுடன், குச்சிகிழங்கு மாவு கலந்து களி போன்ற மாவு தயாரிக்கப்படுகிறது. ஏற்கனவே, அச்சு வார்த்து வைக்கப்பட்டுள்ள "மோல்டிங் அச்சில் வைத்து, சிலைக்கான உதிரி பாகங்கள் உருவாக்கப்படுகின்றன. உட்புறமாக, கெட்டியான காகிதங்களை ஒட்டி, உயரமான சிலைகளாக இருந்தால், சவுக்கு குச்சிகள் வைத்து ஒட்டப்படுகிறது.இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து, தனித்தனியாக உருவாக்கப்பட்ட உடல் பாகங்கள் ஒன்று சேர்க்கப்படுகின்றன. அதற்கும், கல்மாவு மற்றும் குச்சிகிழங்கு மாவு கலவை பயன்படுத்தப்படுகிறது. சிலைகள் முழு உருவம் பெற்றதும், உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, சுவர்களில் பட்டி பார்க்க பயன்படுத்தும் பட்டிமாவு கலவை பூசப்படுகிறது. அதன்பின், வர்ணம் தீட்டப்படுகிறது. விழுப்புரம் பகுதியில் உள்ள தொழிலா ளர்கள், ஏழு மாதங்களாக விநாயகர் சிலை பாகங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள் ளனர். அவற்றை திருப்பூருக்கு எடுத்து வந்து, சிலைகளை உருவாக்குகின்றனர். பெரிய சிலைகளுக்கான பாகங்கள் மட்டும் திருப்பூரிலேயே தயாரிக்கப்படுகின்றன.இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் கூறுகையில்,""திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக, 3,200 சிலைகள் வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தாண்டு, சிவலிங்கம் மீது அமர்ந்த விநாயகர், யாழி வாகனத்தில் அமர்ந்த விநாயகர் மற்றும் செம்பருத்தி பூவில் அமர்ந்துள்ள விநாயகர் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், "வாட்டர் கலர் மூலமாக வண்ணம் தீட்டப்பட உள்ளது. எந்தெந்த பகுதிகளில், எவ்வளவு சிலை வைப்பது என்பது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும், என்றார்.