பதிவு செய்த நாள்
06
ஜூலை
2011
10:07
ஜம்மு : பலத்த பாதுகாப்புக்கிடையில், நேற்று, நாலாயிரத்துக்கும் அதிகமான யாத்ரிகர்கள் அடங்கிய ஆறாவது குழு, தன் அமர்நாத் யாத்திரையைத் துவங்கியது. நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக, கடந்த, 2ம் தேதி, அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. பின், நேற்று முன்தினம் மீண்டும் துவங்கப்பட்டது. இதையடுத்து, 4,307 பேர் அடங்கிய ஆறாவது குழு, தன் யாத்திரையை, ஜம்முவின், "பேஸ் கேம்ப்பில் இருந்து, நேற்று துவங்கியது. செல்லும் வழிகளில், திக்ரி, ரெகம்பில், உதம்பூர், செனானி மற்றும் குட் ஆகிய பகுதிகளில், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. யாத்திரையில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், குறைந்தது ஐயாயிரம் யாத்ரிகர்கள் தங்க வைக்கப்படக் கூடிய இடங்களை, மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. யாத்திரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், விற்கப்படக் கூடிய உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விலைகளைப் பரிசோதனை செய்ய, சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.