பதிவு செய்த நாள்
06
ஜூலை
2011
10:07
ராமநாதபுரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிலைகளில் பெரியளவிலான சேதங்கள் ஏதும் இல்லை, என இந்து அறநிலையத்துறை முதன்மை ஸ்தபதி முத்தையா கூறினார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சேதமடைந்த சுவாமி சிலையை சரி செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ராமேஸ்வரம் பட்சி சிவராஜன் மனுத்தாக்கல் செய்திருந்தார். சேதமுற்ற சிலையை நான்கு மாதங்களுக்குள் சரி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இந்து அறவிலையத்துறை முதன்மை ஸ்தபதி முத்தையா, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். சுவாமி சன்னதி அருகே சோமஸ்கந்தர் சன்னதியில் சேதமடைந்த செம்பிலான விநாயகர், சுப்பிரமண்யசுவாமி, சோமஸ்கந்தர், பர்வதவர்த்தினி அம்மன், அதிகார நந்திகேசுவரர், பெருமாள் சமேத திருவாச்சி உள்ளிட்ட சிலைகள் மற்றும் சேதமடைந்த பளபளப்பு இல்லாத தங்கம், வெள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். இவர் கூறியதாவது: ராமேஸ்வரம் கோயில் சிலைகள், சுவாமி வாகனங்களை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டதின்பேரில் ஆய்வு செய்தேன். சிலைகளில் லேசான சேதங்கள் மட்டுமே உள்ளன. பெருமாள் சமேத பூதேவி சிலையில் வலது கை உடைந்துள்ளதால் பூஜைக்கு ஏற்றதல்ல. விரைவில் புதிய சிலைகள் அமைக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிலைகளில் தலை, கை உள்ளிட்ட உடல் உறுப்புகளில் சேதம் இருந்தால்தான் பூஜை செய்யக்கூடாது. தங்கம், வெள்ளி தேர் பாலிஷ் செய்து புதுப்பிக்க பரிந்துரைக்கப்படும். சுவாமி சன்னதியில் 20 கிலோ 700 கிராம் எடையிலான தங்க சிலையில் சேதமடைந்த திருவாச்சி மற்றும் பரசு ஆயுதம் சரிசெய்யப்படும். வடக்கு தெற்கு கோபுர உட்பட அனைத்து சீரமைப்பு பணிகளும் முடிந்தபின் கும்பாபிஷேகம் நடத்தப்படும். எனது ஆய்வறிக்கையை இந்து அறநிலையத்துறை கமிஷனரிடம் அளிப்பேன். அவரது உத்தரவின்படி பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார். கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், உதவி கோட்டபொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் உடனிருந்தனர்.