பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
12:06
வாலாஜாபாத்: படுநெல்லி கிராமத்தில் நேற்று காலை, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக, நேற்று காலை, 7:00 மணியளவில், மகா கணபதி பூஜை மற்றும் யாக பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, 8:00 மணியளவில், கலச வேள்வி பூஜையும்; 8:45 மணியளவில், கலச புறப்பாடும் நடந்தது. காலை, 9:00 மணியளவில், மேள, தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழுங்க, சிவாச்சாரியார், மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீரை ஊற்றினார். இந்த கும்பாபிஷேக விழாவில், படுநெல்லி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதி வாசிகள், அம்மனை வணங்கி சென்றனர்.