பதிவு செய்த நாள்
20
ஜூன்
2015
12:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை
பெய்தது. இதில், அண்ணாமலையார் கோவிலில் மஹா ரதத்திற்கு, ரூ.10.50 லட்சம் மதிப்பில்
பொருத்தப்பட்ட ஃபைபர் கவசம் சேதமடைந்தது. திருவண்ணாமலையில், நேற்றிரவு, 7 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதனால், கிரிவலப்பாதையில் மரங்கள் முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்ததில், மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த, மின் ஊழியர்கள் உடனடியாக வந்து மின் ஒயர்களை சீர் செய்தனர். இதனால், கிரிவலம் சென்ற பக்தர்களுக்கும், அப்பாதையில் சென்ற வாகனங்களுக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில், வீதி உலா
வரும், 63 அடி உயரமுள்ள மஹா ரதத்துக்கு, ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் மழை மற்றும்
வெயில் பாதிக்காமல் இருக்க, கடந்த பிப்ரவரி மாதம் ஃபைபர் கவசம் பொருத்தப்பட்டது.
நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றினால், தேரின் கிழக்கு பக்கமாக பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகரம் பலத்த காற்றினால், 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. தெற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட இரும்பு தகரம் அப்பளம் போல் நொறுங்கி தேரோடு தேர் ஒட்டியவாறு சேதமடைந்தது.
நகரின் பல்வேறு பகுதிகளில், மின் கம்பங்களின் ஒயர்கள் அறுந்து விழுந்ததால், நகர் முழுவதும் மின்நிறுத்தம் செய்யப்பட்டு, மின் ஒயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், திருவண்ணாமலை நகர் முழுவதும் இருளில் மூழ்கியது.