பதிவு செய்த நாள்
20
ஜூன்
2015
12:06
பெங்களூரு: பனசங்கரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகை கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில், அம்மனின் கவசமும் கிரீடமும் வெட்டி
எடுக்கப்பட்டுள்ளது.பனசங்கரியில் உள்ள பனசங்கரி அம்மன் கோவில், கர்நாடக அறநிலையத் துறைக்குட்பட்ட, வரலாற்று புகழ்மிக்கது. இரவு பூஜைக்கு பின், அம்மனுக்கு அணிந்துள்ள தங்க ஆபரணங்களை கழற்றி, பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பது வழக்கம்.
ஆனால், நேற்று முன்தினம் இரவு, தலைமை அர்ச்சகர் சத்திய நாராயணா சாஸ்திரி, நகைகளை கழற்றி வைக்காமல் சென்று விட்டார். நேற்று காலை, சத்திய நாராயணா சாஸ்திரி, தான் கோவிலை திறக்காமல், அர்ச்சகர் நாகராஜ் சாஸ்திரியை, திறக்கும்படி அனுப்பினார்.
வெள்ளிக்கிழமை என்பதால், அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, நகைகளை கழற்றினார். அப்போது, அம்மன் பாத கவசம் மற்றும் கிரீடத்தில், சிறிய அளவில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டிருந்ததை பார்த்த நாகராஜ் சாஸ்திரி அதிர்ச்சியடைந்தார்.
இது தவிர, அம்மனுக்கு அணிவித்திருந்த, 6 கிராம் குண்டலத்தையும் காணவில்லை. இதுகுறித்து, கமிட்டி உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். கமிட்டி உறுப்பினர் ராஜு, கலெக்டர் சங்கரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, பனசங்கரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
கலெக்டர் சங்கர் கூறியதாவது:கோவில் அர்ச்சகர்கள் சத்ய நாராயணா சாஸ்திரி, நாகராஜ்
சாஸ்தரி, சோமசேகர் சாஸ்திரி, சதீஷ் சாஸ்திரி ஆகியோர் மட்டுமே, கோவில் மூலஸ்தானத்துக்குள் சென்று வருவர். நான்கு பேரும், ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி தப்பிக்க முயற்சிக்கின்றனர். அவர்களை விசாரித்தால் உண்மை தெரியும். கோவிலில்
வைக்கப்பட்டுள்ள, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பனசங்கரி கோவிலின் பூஜையை, இரு குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இவ்விரு குடும்பத்தினரின் தனிப்பட்ட விரோதமும் கூட, இந்த கொள்ளைக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.