பதிவு செய்த நாள்
11
ஜூலை
2011
10:07
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கடந்த 2009ம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோயில் மஹாகும்பாபிஷேகம் நடந்தது. அதற்கான கும்பாபிஷேக தின வருஷாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபமும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து தங்ககொடி மரம் முன்பு கலசங்களில் புனிதநீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் போத்திமார், சிவாச்சார்யார்கள், பட்டாச்சார்யர்களால் நடத்தப்பட்டது. அதன்பின் 8.30 மணி அளவில் கும்பங்களில் புனிதநீர் மேளதாளங்களுடன் கோயில் மேல் தளம் எடுத்து செல்லப்பட்டது.
காலை மூலவர் விமானத்துக்கு போத்திமார் மூலமும், சண்முகர் விமானத்துக்கு சிவாச்சார்யார் மூலமும், வெங்கடாசலபதி விமானத்துக்கு பட்டாச்சார்யர்கள் மூலம் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்பு கூடியிருந்த பக்தர்கள் மீது அபிஷேக நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்பு வள்ளி, தெய்வானை விமானங்களுக்கு போத்திமார் மூலம் புனிதநீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் மூலவர்க்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. வருஷாபிஷேக விழாவையொட்டி இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறவில்லை. சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனி தனி தங்க சப்பரங்களில் வீதி உலா வந்தனர். விழாவில் கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமாரி, உள்துறை மேலாளர் சுப்பிரமணியன், கோயில் கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளர் முருகன், .எம்.பி.,மெஞ்ஞானபுரம் இணை மேலாளர் கணேசன், உடன்குடி வேளாண்மை உதவி இயக்குநர் பாரதி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.