பதிவு செய்த நாள்
11
ஜூலை
2011
10:07
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் ரூ. 41 லட்சம் செலவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான முதல் கால பூஜைகள் ஜூலை 6 ல், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. முதல் நாளில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த பூஜையில், திருவிடைமருதூர் கண்ணப்ப சிவாச்சாரியார் தலைமையில் 75 சிவாச்சாரியார்கள் 96 வகை மூலிகைப்பொருட்களுடன் ஹோமம் வளர்த்தனர். வேதபாராயணம், தேவாரம் பாடல்கள் பாடி 600 குடங்களில் நவ கைலாசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கொண்டு பூஜைகள் செய்தனர். நேற்று காலை சுமார் 9.30 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள ஏழு கலசங்களுக்கும், மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதிகளுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கருடன்: கும்பாபிஷேகத்தின் போது இரண்டு கருடன்கள் கோபுரத்தின் மீது வட்டமடித்ததை பார்த்த பக்தர்கள் ஆனந்த பரவசமடைந்தனர். பின்னர் மகாதீபாராதனையும், மூலவருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. பக்தர்கள் மீது கும்பாபிஷேக தீர்த்தம் தெளிக்கப்பட்டது. கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.