சூலூர் : சோமனூர் சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சோமனூர் சுப்பிரமணியர் கோவில் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பழமையானது. இக்கோவில் வளாகத்தில் செல்வவிநாயகர், மாகாளியம்மன், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பணிகள் துவங்கி, கோவில், கோபுரம் முன்மண்டபம் புதிதாக கட்டப்பட்டன.கடந்த 8ம்தேதி காலை கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை முதற்கால யாகபூஜையும், சனியன்று இரண்டாம்,மூன்றாம்கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு நான்காம்கால யாகசாலை பூஜையும், கலசங்கள் புறப்பாடும் நடந்தன. காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை செல்வவிநாயகர், மாகாளியம்மன், சுப்பிரமணியர், நவகிரகங்களுக்கு குழந்தைசாமி சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.