பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
05:07
1. மத்யோத்பவே புவ: இளாவ்ருத நாம்னி வர்ஷே
கவுரீ ப்ரதான வனிதா ஜனமாத்ர பாஜி
சர்வேண மந்த்ரநுதிபி: ஸமுபாஸ்யமாநம்
ஸங்கர்ஷணாத்மகம் அதீச்வர ஸம்ச்ரயே த்வாம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த பூமியின் மத்தியில் இளாவ்ருதம் என்ற பெயர் கொண்ட பூகண்டம் உள்ளது. அங்கு பார்வதி மற்றும் பெண்களே உள்ளனர். (இது ஒரு சாபமாகும். அங்கு நுழையும் ஆண்கள் பெண்களாக மாறிவிடுவர்) அவ்விடத்தில் உள்ள பரமேஸ்வரனான சிவன் பல்வேறு மந்திரங்கள் கொண்டு உன்னை ஆராதித்து வருகிறார். ஸங்கர் ஷணனின் ரூபமான உன்னை நான் சரணம் என்று புகுகிறேன்.
விளக்கம்: இங்கு நாம் சற்று பாகவதத்தின் பூகோளவர்ணனையைப் புரிந்து கொள்வோம். பூமி ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை த்வீபங்கள் எனப்படும், இவையான - ஜம்புத்வீபம் (உப்பு நீரால் சூழப்பட்டது). சால்மலவீபம் (கரும்புச்சாறு சூழப்பட்டது), பிலக்ஷத்த்வீபம் (கள் சூழ்ந்துள்ளது), குகத்த்வீபம் (நெய்யால் சூழப்பட்டது), கிரௌஞ்ச த்வீபம் (தயிரால் சூழப்பட்டது), சாகத்த்வீபம் (பாலால் சூழப்பட்டது), மற்றும் புஷ்கரத்வீபம் (சுத்தமான் நீர் சூழ்ந்துள்ளது). இவை அனைத்திலும் நடுவில் உள்ளது ஜம்புத்வீபம் ஆகும் (இதுவே ஆசிய கண்டம்), அதன் நடுவில் பூகண்டம் எனப்படும் ஒன்பது வர்ஷங்கள் உள்ளன. அவையாவன - இளாவ்ருதம் (இமயமலை), பத்ராசுவம் (சீனா), ஹரிவர்ஷம் (அரேபியா), கேதுமாலம் (இரான்), ரம்மியகம் (ரஷ்யா), ஹிரண்மய வர்ஷம் (மஞ்சூரியா), உத்தரகுரு (மங்கோலியா), கிம்புருஷம் (இமய அடிவாரம்), பாரதவர்ஷம் (இந்தியா) என்பவை ஆகும்.
ஒவ்வொரு வர்ஷத்தின் நடுவிலும் பல மலைகள் உள்ளன. இளவிரதவர்ஷத்தின் நடுவில் உள்ளது மேருமலையாகும். ஸங்கர்ஷணன் என்பது யார்? அனைத்து லோகங்களுக்கும் கீழே உள்ள பாதாள லோகத்திற்கும் கீழே ஆதிசேஷனாக உள்ள நாராயணன் ஸங்கர்ஷணன் என்ற பெயருடன் உள்ளார். அவரது தலைகளில் ஒரு கடுகு அளவே உள்ளது இந்த உலகமாகும்.
2. பத்ராச்வ நாமக இளாவ்ருத பூர்வ வர்ஷே
பத்ரச்ரவோயி: ரிஷிபி: பரிணூயமானம்
கல்பாந்தகூட நிகமோத்தரண ப்ரவீணம்
த்யாயாமி தேவி ஹயசீர்ஷனும் பவந்தம்
பொருள்: (இது ஹயக்ரீவரைக் குறித்ததாக உள்ளதால் படிக்கும் யாவருக்கும் சிறந்த கல்வி வளம் கிடைக்கப்பெறும் என்பது அடியேனது எண்ணம்). தேவர்களின் தேவனே! குருவாயூரப்பனே! இளாவ்ருத வர்ஷத்தின் கிழக்கில் உள்ள மற்றொரு வர்ஷம் பத்ராகவம் என்பதாகும். இங்கு உள்ள பத்ரச்ரவஸர்கள் என்னும் முனிவர்களால் போற்றப்படுபவரும், கல்பத்தின் முடிவில் மது என்ற அசுரன் ப்ரும்மாவிடம் இருந்து அபகரித்துச் சென்ற வேதங்களை மீட்டுக் கொடுத்த வல்லவரும், ஹயக்ரீவமாக உருவம் உடையவரும் (ஹயம் என்றால் குதிரை, க்ரீவம் என்றால் கழுத்து, ஆக குதிரையின் முகம் உடையவர்) ஆகிய உன்னைத் த்யானம் செய்கிறேன்.
3. த்த்யாயாமி தக்ஷிணகதே ஹரிவர்ஷ வர்ஷே
ப்ரஹ்லாத முக்ய புருஷை: பரிஷேவ்யமாணம்
உத்துங்க சாந்த தவளாக்ருதிம் ஏக சுத்த
ஞானப்ரதம் நரஹரிம் பகவன் ப்ரபத்யே
பொருள்: (இது நரஸிம்ஹப் பெருமாளைக் குறித்து உள்ளதாகும்). பகவானே! குருவாயூரப்பனே! இளாவ்ருத வர்ஷத்திற்குத் தெற்கில் உள்ள வர்ஷம் ஹரிவர்ஷம் என்பதாகும். அங்கு ப்ராஹ்லாதனைத் தலைமையாகக் கொண்ட பலராலும் வணங்கப்படுபவரும், உயர்ந்தும், சாந்தமாகவும், வெண்மையாகவும் உள்ள உருவம் உடையவரும், உயர்ந்த ஞானத்தை அளிப்பவருமானவரும், நரஸிம்ஹனாகவும் உள்ள உன்னிடம் சரண் அடைகிறேன்.
4. வர்ஷே ப்ரதீசி லலிதாத்மனி கேதுமாலே
லீலா விசேஷ லலித ஸ்மித சோபநாங்கம்
லக்ஷ்ம்யா ப்ரஜாபதி ஸுதைச்ச நிஷேவ்யமாணம்
தஸ்யா: ப்ரியாய த்ருத காமதநும் பஜே த்வாம்
பொருள்: (இது மஹாலக்ஷ்மியைக் குறித்த ஸ்லோகம் ஆகும். இதனைப் படிப்பவர்களுக்கு நல்ல கணவனும் தம்பதிகள் அன்யோன்யமாகவும் இருப்பார்கள்). குருவாயூரப்பனே! இளாவ்ருத வர்ஷத்திற்கு மேற்கில் உள்ள வர்ஷம் கேதுமாலம் என்பதாகும். இங்கு தனது லீலைகளாலும், புன்னகையாலும், ஒளிவீசும் உடலுடைய மஹாலக்ஷ்மியாலும், ப்ரும்மாவின் புத்திரர்களாலும் வணங்கப்படுவது யார்? அத்தகைய மஹாலக்ஷ்மிக்காக மன்மதனின் உருவம் உடையவனான பரம்பொருளே! அத்தகைய உருவம் உடைய உன்னை த்யானிக்கிறேன்.
5. ரம்யே உதீசிகலு ரம்யக நாம்னி வர்ஷே
தத்வர்ஷநாத மனுவர்ய ஸபர்யமாணாம்
பக்தைக வத்ஸலம் அமத்ஸர ஹ்ருத்ஸு பாந்தம்
மத்ஸ்யாக்ருதிம் புவநநாத பஜே பவந்தம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விச்வத்தின் நாதனே! இளாவ்ருத வர்ஷத்தின் வடக்கில் உள்ள வர்ஷம் ரம்யகம் என்பதாகும். பெயருக்கு ஏற்றாற்போல் அழகான இடமாகும். அந்த இடத்தில், அந்த வர்ஷத்தின் அதிபதியான மனுவால் வணங்கப்படுபவரும், அடியார்களிடம் எப்போதும் ப்ரியமாக உள்ளவரும் பொறாமை குணம் இல்லாதவர்கள் மனதில் ப்ரகாசமாக உள்ள வரும். மச்ச (மீன்) உருவம் உடையவரும் ஆகிய உன்னை வணங்குகிறேன்.
6. வர்ஷம் ஹிரண்மய ஸமாஹ்வயம் ஔத்தராஹம்
ஆஸீனம் அத்ரி த்ருதி கர்மட காமடாங்கம்
ஸம்ஸேவதே பித்ருகணே ப்ரவர: அர்யமா அயம்
தம் த்வாம் பஜாமி பகவன் பரசின் மயாத்மன்
பொருள்: ஞானமே உருவாக உள்ள பகவானே! குருவாயூரப்பா! இளாவ்ருத வர்ஷத்தின் வடக்கில் உள்ள வர்ஷம் ஹிரண்மயம் என்பதாகும். அங்கு உள்ள மந்தர மலையைத் தாங்குபவரும், ஆமையின் உருவம் உடையவரும் ஆகிய உன்னை - பித்ருக்களில் தலை சிறந்தவரான அர்யமா ஆராதனை செய்து வருகிறார். இப்படிப்பட்ட உன்னை நான் வணங்குகிறேன்.
7. கிம்ச உத்தரேஷு குருஷு ப்ரியயா தரண்யா
ஸம்ஸேவிதே: மஹித மந்த்ரநுதி ப்ரபேதை:
தம்ஷ்ட்ராக்ர க்ருஷ்ட கனப்ருஷ்ட கரிஷ்ட வர்ஷ்மா
த்வம் பரஹி விஜ்ஞநுத யஜ்ஞவராஹ மூர்த்தே
பொருள்: உயர்ந்த ஞானம் உடையவர்களால் துதிக்கப்படும் வராஹமூர்த்தியே! குருவாயூரப்பனே! இளாவ்ருத வர்ஷத்தின் வடக்கே உள்ள வர்ஷம் உத்தரகுரு என்பதாகும். அங்கு உனது ப்ரியமான துணைவியான பூதேவி உன்னை ஸ்லோகங்களாலும், மந்திரங்களாலும் ஆராதித்து வருகிறாள். அவளால் ஆராதிக்கப்படும். தித்திப் பற்கள் மேகத்தின் அடிப்பகுதியைத் தொடும் அளவிற்கு பெருத்த உடல் உடையவரும் ஆன நீ என்னைக் காக்க வேண்டும்.
8. யாம்யாம் திசம் பஜதி கிம்புருஷாக்ய வர்ஷே
ஸம்ஸேவித: ஹநுமதா த்ருட பக்தி பாஜா
ஸீதாபிராம பரமாத்புக ரூபசாலீ
ராமாத்மக: பரிலஸன் பரிபாஹி விஷ்ணே
பொருள்: விஷ்ணுவே! குருவாயூரப்பனே! இளாவ்ருத வர்ஷத்திற்குத் தெற்கில் உள்ள வர்ஷம் கிம்புருஷம் என்பதாகும். அங்கு மாறாத பக்தியுள்ள ஆஞ்சநேயரால் வணங்கப்படுபவரும், சீதையின் மனதிற்கு மிகவும் பிரியமான இனிய அழகோடு உள்ள அற்புதமான உருவம் உடையவரும், ஸ்ரீராமனாகவும் உள்ள நீ என்னை காக்க வேண்டும்.
9. ஸ்ரீநாரதேந ஸஹ பாரத கண்ட முக்யை:
த்வம் ஸாங்க்ய யோகநுதிபி: ஸமுபாஸ்யமான:
ஆகல்பகாலம் இஹ ஸாது ஜநாபிரக்ஷீ
நாராயண: நரஸக: பரிபாஹி பூமன்
பொருள்: குருவாயூரப்பனே! எங்கும் உள்ளவனே! நீ இந்தப் பாரத கண்டத்தில் உள்ள சிறந்த ஞானிகளுடன் நாரதரும் சேர்ந்து யோகத்தாலும், மந்திரங்களாலும் உபாஸிக்கப்படுகிறாய். இப்படிப்பட்ட நீ ப்ரளயகாலம் முடியும்வரை இந்த உலகில் உள்ள அனைவரையும் காப்பாற்றி வருகிறாய். நரனைத் தோழனாகவும் நாராயணன் என்று பெயர் கொண்டவனும் ஆகிய நீ (நரநாராயணன்) என்னைக் காக்க வேண்டும்.
10. ப்லாஷே அர்க்கரூபம் அயி சால்மல இந்துரூபம்
த்வீபே பஜந்த குசநாமனி வன்ஹிரூபம்
க்ரௌஞ்சே அம்புரூபம் அத வாயுமயம் ச சாகே
த்வாம் ப்ரஹ்மரூபம் அயி புஷ்கரநாம்னி லோகா
பொருள்: குருவாயூரப்பனே! உன்னை - பிலக்ஷத்வீபத்தில் உள்ளவர்கள் சூர்யனாகவும் (அர்க்கரூபம்), சால்மல த்வீபத்தில் சந்திரனாகவும் (இந்துரூபம்), குசத்வீபத்தில் அக்னியாகவும் (வன்ஹிரூபம்), கிரௌஞ்ச த்வீபத்தில் நீராகவும் (அம்புரூபம்), சாகத்வீபத்தில் வாயுவாகவும், புஷ்கரத்வீபத்தில் ப்ரஹ்மமாகவும் வணங்குகின்றனர்.
11. ஸர்வை: த்ருவாதிபி: ஊருப்ரகரைப் க்ரஹை: ச
புச்சாதிகேஷு அவயவேஷு அலிகல்ப்யமானை:
த்வம் சிம்சுமாரவபுஷா மஹதாம் உபாஸ்ய:
ஸந்த்யாஸு ருந்தி நரகம் மம ஸிந்து சாயின்
பொருள்: திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவனே! குருவாயூரப்பனே! வாள் உள்பட பல உடல் உறுப்புகளில் துருவ நட்சத்திரம் உள்பட பல நட்சத்திரங்களும், கிரகங்களும் கொண்டு, முதலை வடிவமாக உள்ளன. முனிவர்கள் சந்த்யாகால வேளையில் த்யானிக்கின்றனர். இப்படிப்பட்ட எனது நரகத்திற்கு இணையான வ்யாதியை நீக்க வேண்டும். (சிம்சு மாரம் என்பது முதலை என்பதாகும். இந்த உருவில் பரம்பொருள் ஆகாயத்தில் உள்ளான். அவனது உடலில் சூரியன், நட்சத்திரங்கள் போன்றவை உள்ளன. இப்படிப்பட்ட உருவத்தை சாயங்கால வேளையில் த்யானித்தால் நரகவேதனை அண்டாது. தனது வ்யாதிகளை நரக வேதனையாக பட்டத்ரி கூறுகிறார்.)
12. பாதாள மூலபுவி சேஷதனும் பவந்தம்
லோலைக குண்டல வராஜி ஸஹஸ்ரசீர்ஷம்
நீலாம்பலம் த்ருதஹலம் புஜகாங்கனாபி:
ஜுஷ்டம் பஜே ஹரகதான் குருகேஹ நாத
பொருள்: குருவாயூரப்பனே! க்ருஷ்ணா! பாதாள லோகத்தின் அடிப்பகுதியில் ஆதிசேஷனாக உள்ளவனே; ஆயிரம் தலைகள் கொண்டவனே; ஒரு குண்டலத்தின் மூலம் அனைத்து தலைகளும் பிரகாசிக்கும்படி உள்ளவனே. நீல நிற ஆடை உடுத்தியவனே; நாகலோகத்தில் உள்ள பெண்களால் வணங்கப்படுபவனே! உன்னை நான் வணங்குகிறேன் நோய்களை நீக்குவாயாக.