பதிவு செய்த நாள்
11
ஜூலை
2015
11:07
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் கட்டட பணியில், பொது மக்கள் தீவிரமாக உள்ளனர். பாளையம் பேரூராட்சி ராமகிரியில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இக்கோயில், சாமா நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.இங்கு நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் கமலவள்ளி தாயாருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. மேலும் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், மணி மண்டபம், ராஜகோபுரம் என சகல அம்சங்களுடன் கோயில் உள்ளது. இந்த கோயில் நிர்வாகத்தின் கீழ் 400 க்கும் மேற்பட்ட ஏக்கர் மான்ய நிலம் இன்றும் உள்ளது. தேரோட்டமும் உண்டு. பழமை வாய்ந்ததுஎன்பதால், கோயிலின் சுற்றுப்பகுதி மற்றும் மேல் தளம் பெயர்ந்து கிடந்தது. 2007-ல் சுவாமி சிலைகள் தனியாக எடுத்து வைக்கப்பட்டு, கோயில் கட்டும் பணி துவங்கியது. அறங்காவலர் குழு தலைவர் கருப்பணன், செயலாளர் வீரப்பன், பொருளாளராக பொன்ராம் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் பணிகள் விரைவு படுத்தப்பட்டன. தற்போது 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் சுற்றுச்சுவர், தளம் அமைத்தல், முன்புற கோபுரத்தில் சிலைகள் வடித்தல் போன்ற பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. அரசு நிதி உதவி எதுவும் இல்லாத நிலையில், இக்கோயில் கட்டட பணியை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் காண மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். கோயில் பணிகள் தொடர்பாக 94437-31969ல் தொடர்பு கொள்ளலாம் என அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.