பாண்டிய நாட்டில் மன்னன் கூன்பாண்டியன் சமணசமயத்தை தழுவினான். மன்னனை பின்பற்றி மக்களும் சமணத்தையே பின்பற்றினர். கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் சிவபக்தர்களாக திகழ்ந்தனர். மங்கையர்க்கரசியார், ஞானசம்பந்தர் மீது அன்பு கொண்டவராய், அவரை பாண்டிய நாட்டுக்கு அழைத்தார். வேதாரண்யத்திலிருந்து ஞானசம்பந்தர் மதுரை வந்தார். ஞானசம்பந்தர் சொக்கநாதர் மீது ஆலவாய்பதிகம் பாடினார். பின் ஒரு மடத்தில் தங்கினார். இதையறிந்த சமணர்கள் மடத்திற்கு தீ வைத்தனர். சமணர்கள் வைத்த தீ கூன்பாண்டியனை வெப்புநோயாக பற்றியது. மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோளின் படி மந்திரமாவது நீறு பதிகம்பாடி வெப்புநோயை போக்கினார். இதன் பின்னர் சமணர்கள் தீயிலும் நீரிலும் வாதம் செய்து வெற்றி பெற விரும்பினர். இந்த அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் ஞானசம்பந்தரே வெற்றி பெற்றார். அப்போது ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் வேந்தனும் ஓங்குக என்றதனால் பாண்டியனுடைய கூனும் நிமிர்ந்தது. கூன் இருந்ததால் கூன் பாண்டியன் என்றும், கூன் நிமிர்ந்ததால் நின்ற சீர் நெடுமாறன் என்றும் மன்னனுக்கு பெயர் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் மன்னன் சைவ சமயத்தை பின்பற்றினான். மக்களும் சைவத்தை தழுவினர். பாண்டியநாட்டில் சைவநெறி மீண்டும் தழைத்தது. மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும், நின்ற சீர் நெடுமாறனும் 63 நாயன்மார்கள் வரிசையில் இடம் பெறும் பேறு பெற்றனர். திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கிய மடம் திருஞானசம்பந்தர் ஆதீனத் திருமடமாக தெற்கு ஆவணிமூலவீதியில் உள்ளது.