பதிவு செய்த நாள்
18
ஜூலை
2015
12:07
திருப்பூர்:ஆடி மாதம் பிறப்பையடுத்து, திருப்பூரில் அனைத்து பூக்களின் விலையும், கிடுகிடுவென உயர்ந்துள்ளது.திருப்பூர் தினசரி பூ மார்க்கெட்டுக்கு மதுரை, தேனி, நிலக்கோட்டை, திண்டுக்கல், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து, அனைத்து வகையான பூக்களும், விற்பனைக்கு வருகின்றன. வரத்து குறைந்தபோதும், விசேஷ தினங்கள் இல்லாததால், இம்மாத துவக்கம் முதலே, பூக்கள் விலை குறைவாகவே இருந்தது. மல்லிகை கிலோ 80 ரூபாய்; முல்லை 100; சம்பங்கி, அரளி பூக்கள் 20; கோழிக்கொண்டை 30 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது. நேற்று, ஆடி மாதம் பிறந்த நிலையில், முதல் வெள்ளிக்கிழமை என்பதால், திருப்பூர் சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை துவங்கியது. இதனால், பூக்களின் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, மல்லிகை கிலோ 300 ரூபாய்; முல்லை 240; சம்பங்கி 140; அரளி 100; கோழிக்கொண்டை 80; செவ்வந்தி 160 ரூபாய்; மாலை, பெரியது 200 ரூபாய், சிறிய மாலை 70 ரூபாயாக இருந்தது.வியாபாரிகள் கூறுகையில், "காற்று அதிகமாக வீசுவதால் பூக்கள் உதிர்வது அதிகரித்து, மார்க்கெட்டுக்கு வரத்து, 60 சதவீதம் சரிந்துள்ளது. எனினும், கடந்த ஒரு மாதமாகவே, பூக்கள் விலை சீராகவே இருந்தது. ஆடி மாதம் பிறந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது; இது, மேலும் தொடரவே வாய்ப்புள்ளது, என்றனர்.