பதிவு செய்த நாள்
23
ஜூலை
2015
04:07
1. அயி ஸபல முராரே பாணிஜாநு ப்ரசாரை:
கிமபி பவநபாகாந் பூஷயந்தௌ பவந்தௌ
சலித சரண குஞ்ஜௌ மஞ்ஜு மஞ்ஜுர சிஞ்ஜா
ச்ரவண குதுக பாஜௌ சேரது: சாரு வேகாத்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பலராமனுடன் உள்ளவனே! நீயும் பலராமனும் சிறு குழந்தைகளாக, உங்கள் கைகளையும் முழங்கால்களையும் ஊன்றித் தவழ்ந்து தவழ்ந்து நந்தகோபரின் வீட்டின் அனைத்து இடங்களிலும் சென்றீர்கள். இப்படியாக அந்த வீடு அழகு பெற்றது. தாமரை போன்ற உனது கால்களில் கட்டப்பட்ட சலங்கைகள் நீ தவழ்ந்தபோது ஒலித்தன. அந்த ஒலியை மேலும் கேட்க விரும்பிய நீ மிகவும் விரைவாகத் தவழ்ந்தாய் அல்லவா?
2. ம்ருது ம்ருது விஹஸந்தௌ உந்மிஷத் தந்தவந்தௌ
வதந பதித தேசௌ த்ருச்ய பாத அப்ஜ தேசௌ
புஜ கலித கர அந்த வ்யாகலத் கங்கண அங்கௌ
மதிம் அஹரதம் உச்சை: பச்யதாம் விச்வ ந்ரூணாம்
பொருள்: குருவாயூரப்பா! நீங்கள் இருவரும் மெதுவாக மென்மையாகச் சிரித்தீர்கள். உங்கள் பற்கள் சிறிதாக அழகாக வெளியில் தெரிந்தன. உங்கள் தலைமுடி அழகாக உங்கள் முகங்களில் புரண்டன. பல ஆபரணங்களுடன் உங்கள் திருப்பாதங்கள் அழகாக காணப்பட்டன. புஜங்களில் அணிவிக்கப்பட்ட வளையல்கள் நழுவி மணிக்கட்டில் வந்து விழுந்து, அதற்கான அடையாளங்களும் ஏற்பட்டிருந்தன. இப்படியாக உன்னைக் கண்டவர்கள் மனதை கவர்ந்தீர்கள்.
3. அநுஸரதி ஜந ஒகே கௌதுக வ்யாகுல அக்ஷே
கிமபி க்ருத நிநாதம் வ்யாஹஸந்தௌ த்ரவந்தௌ
வலித வதந பத்மம் ப்ருஷ்டத: தத்த த்ருஷ்டீ
கிமிவ ந விததாதே கௌதுகம் வாஸுதேவ
பொருள்: குருவாயூரப்பா! வாஸுதேவா! உன்னைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் மகிழ்ச்சி பொங்கும் கண்களை உடைய கோபர்கள் உன்னைத் தொடர்ந்து வந்தனர். அப்போது நீ உனக்கே உரிமையான சிரிப்பை உதிர்த்துவிட்டு வேகமாகத் தவழ்ந்தாய். தவழும்போது உனது தாமரை போன்ற முகத்தைத் திருப்பி அவர்களைப் பார்த்தாய். இதன் மூலம் நீ அவர்களுக்கு அளித்த ஆனந்தம் எத்தனை உயர்ந்தது?
4. த்ருத கதிஷு பதந்தௌ உத்திதௌ லிப்த பங்கௌ
திவி முநிபி: அபங்கை: ஸஸ்மிதம் வந்த்ய மாநௌ
த்ருதம் அத ஜநநீப்யாம் ஸாநுகம்பம் க்ருஹீதௌ
முஹு: அபி பரிரப்தௌ த்ராக் யுவாம் கம்பிதௌ ச
பொருள்: குருவாயூரப்பா! நீங்கள் இருவரும் மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தீர்கள். அப்போது வேகமாக நடக்க முயற்சிக்கும்போது கீழே விழுந்தீர்கள். அதனால் கீழே உள்ள சேறு உங்கள் மீது படிந்தது. இப்படியாக உன்னைக் கண்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் முனிவர்கள் மகிழ்வுடன் வணங்கினர். பின்னர் உங்கள் தாய்மார்கள் விரைந்து வந்து உங்களைத் தூக்கி அணைத்துக் கொண்டு முத்தம் பொழிய ஆரம்பித்தனர்.
5. ஸ்நுத குச பரம் அங்கே தாரயந்தீ பவந்தம்
தரல மதி யசோதா ஸ்தந்யதா தந்ய தந்யா
கபட பசுப மத்யே முக்த ஹால அங்குரம் தே
தசந முகுள ஹ்ருத்யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ
பொருள்: இடையனாக வேடம் கொண்டவனே! கபடனே! குருவாயூரப்பா! தானாகவே பால் சுரந்த பெரிய ஸ்தனங்கள் மூலமாக, உன்னைத் தனது மடியில் படுக்க வைத்து பால் ஊட்டிய யசோதை எத்தனை பேறு பெற்றவள்? இப்படியாக நீ பாலைப் பருகும்போது சிறிதாக முளைத்த மொட்டுப் போன்ற உனது பற்களையும், மயக்கும் புன்சிரிப்பையும் உடைய உனது திருமுகத்தைக் கண்ட யசோதை மிகவும் மகிழ்ந்தாள் அல்லவா?
6. ததநு சரண சாரீ தாரகை: ஸாகம் ஆராத்
நிலய ததிஷு கேலந் பால சாபல்ய சாலீ
பவந சுக விலாலாந் வத்ஸகாந் ச அநுதாவந்
கதம் அபி க்ருத ஹாஸை: கோபகை: வாரித: அபூ:
பொருள்: குருவாயூரப்பா! பின்னர் நீ நடக்கத் தொடங்கினாய். அப்போது ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து அனைத்து வீடுகளுக்கும் சென்று உனக்கே உரித்தான சேட்டைகளைச் செய்தாய். அவர்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட கிளி, பூனை. மாட்டுக்கன்று ஆகியவற்றை நீ துரத்திக் கொண்டு ஓடினாய். இதனைக் கண்டு மகிழ்ந்த கோபர்கள் சிரித்துக் கொண்டே உன் பின்னால் ஓடிவந்து உன்னைப் பிடித்தனர் அல்லவா?
7. ஹல தர ஸஹித: த்வம் யத்ர யத்ர உபயாத:
விவச பதித நேத்ரா: தத்ர தத்ர ஏவ கோப்ய:
விகலித க்ருஹ க்ருத்யா: விஸ்ம்ருத அபத்ய ப்ருத்யா:
முரஹர முஹு: அத்யந்த ஆகுலா: நித்யம் ஆஸந்
பொருள்: முரன் என்னும் அசுரனை அழித்தவனே! குருவாயூரப்பா! கலப்பையைக் கையில் கொண்டவனாகிய பலராமனுடன் நீ எந்த இடங்களுக்குச் சென்றாயோ, அங்கு உள்ள கோபிகைகள் தங்களது குழந்தைகளையும் கவனிக்காமல் வீட்டு வேலைகளையும் கவனிக்காமல், வேலை செய்பவர்களையும் மறந்து உன்னையே பார்த்து, அன்றாடம் ஆனந்தம் அடைந்தனர்.
8. ப்ரதிநவ நவநீதம் கோபிக: தத்தம் இச்சந்
கலபதம் உபகாயந் கோமலம் க்வ அபி ந்ருத்யந்
ஸதய யுவதி லோகை: அர்ப்பிதம் ஸர்பி: அச்நந்
க்வசந நவ விபக்வம் துக்தம் அபி ஆபிப: த்வம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கோபிகைகள் உனக்குக் கொடுக்கும் புதிய வெண்ணெயை மிகவும் விரும்பினாய். அதற்காக உனது மழலைக் குரலால் இனிமையாகப் பாடினாய்; அழகாக நடனம் ஆடினாய்; இதைக் கண்டு மகிழ்ந்த இளம்பெண்கள் உனக்கு அளித்த நெய்யை உண்டாய். அவர்கள் உனக்கு அளித்த காய்ச்சிய பாலைப் பருகினாய்.
9. மம கலு பலிகேஹே யாசநம் ஜாதம் ஆஸ்தாம்
இஹ புந: அபலாநாம் அக்ரத: ந ஏவ குர்வே
இதி விஹித மதி: கிம் தேவ ஸந்த்யஜ்ய யாச்ஞாம்
ததி க்ருதம் அஹா: த்வம் சாருணா சோரணேந
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன் மனதில் நான் முன்பு மகாபலியிடம் யாசித்து நின்றேன். (அது அவன் கர்வத்தை ஒடுக்க). ஆனால் கர்வம் இல்லாத இவர்களிடம் யாசிக்க மாட்டேன் என்று நினைத்தாய் போலும். இதனால்தான் நீ தயிரையும் நெய்யையும் திருடி உண்டாயா?
10. தவ ததி க்ருத மோஷே கோஷ யோஷா ஜநாநாம்
அபஜத ஹ்ருதிரோஷ: ந அவகாசம் ந சோக:
ஹ்ருதயம் அபி முஷித்வா ஹர்ஷ ஸிந்தௌ ந்யதா: த்வம்
ஸ: மம சமய ரோகாந் வாத கேஹ அதிநாத
பொருள்: குருவாயூரப்பா! நீ இடையர்கள் வீட்டில் இருந்த தயிர், நெய் ஆகியவற்றைத் திருடினாய். இருந்த போதிலும் உன் மீது அங்கு இருந்த பெண்களுக்குக் கோபமோ வருத்தமோ உண்டாகவில்லை. என்ன காரணம்? நீ அவர்கள் உள்ளத்தையும் சேர்த்துத் திருடி விட்டாய். அதனால் அவர்கள் ஆனந்தமாக இருந்தனர். அல்லவா? இப்படிப்பட்ட நீ எனது பிணிகளையும் திருடமாட்டாயா?