பதிவு செய்த நாள்
14
ஜூலை
2011
11:07
பொள்ளாச்சி : தமிழகத்திலுள்ள ஏழு கோவில்கள், செயல் அலுவலர் நிலையிலிருந்து உதவி ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட கோவில்கள் உட்பட 24 கோவில்களுக்கு, உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், 635 கோவில்கள், செயல் அலுவலர் நிலையில் உள்ளன. செயல் அலுவலர் முதல் நிலையில், 66 கோவில்கள் உள்ளன. கோவில்களின் ஆண்டு வருமானத்தைப் பொறுத்து, அவற்றை தரம் உயர்த்துவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஏழு கோவில்கள் செயல் அலுவலர் நிலையிலிருந்து உதவி ஆணையர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் ஆகிய கோவில்கள், நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இக்கோவில்களுக்கு புதிய உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, கடந்தாண்டு தரம் உயர்த்தப்பட்ட விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில், மதுரை கூடல்அழகர் கோவில், மானாமதுரை மணப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் (வெங்கடாஜலபதி) கோவில், திருநெல்வேலி பன்பொழி திருமலை குமாரசாமி கோவில், பல்லடம் அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், வேலூர் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் ஆகிய கோவில்களில், உதவி ஆணையர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. இந்த காலி பணியிடங்களும் தற்போது நிரப்பப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் காலியாக இருந்த உதவி ஆணையர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. இதில், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காலியாக இருந்த உதவி ஆணையர் பணியிடங்களும், திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருத்தணி முருகன் கோவில் ஆகிய இடங்களில் இணை ஆணையர் உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உதவி ஆணையர்கள் அந்தந்த இடங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.