நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி களப பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடிமாதத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 12 நாட்கள் களபபூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பூஜை நேற்று தொடங்கியது. இதற்காக திருவாடுதுறை ஆதீனம் சார்பில் தங்ககுடம் வழங்கப்பட்டது. அதில் சந்தனம், களபம், பச்சைகற்பூரம், ஜவ்வாது, கோராசனை, பன்னீர் போன்ற வாசனை பொருட்கள் கலந்த திரவியம் நிரப்பப்பட்டது. அந்த கலசத்துக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரு பூஜை நடத்தினார். பின்னர் அந்த தங்ககுடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திருவாடுதுறை ஆதீனம் 24-வது குரு மகாசன்னிதானம் அம்பல வாணதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 14-ம் தேதி வரை இந்த களபபூஜை நடைபெறுகிறது.