பதிவு செய்த நாள்
18
ஜூலை
2011
10:07
மானாமதுரை : விஞ்ஞான வளர்ச்சியிலும், தம் குலதெய்வத்திற்கு, "மணி ஓசை, சலங்கை சத்தம் கேட்க வேண்டும் என்ற வேண்டுதலால், மாட்டுவண்டியில் பயணம் செய்கின்றனர், சிவகங்கை புதூர் கிராமத்தினர். சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் புதூர் கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் குலதெய்வம், மானாமதுரை மேலப்பிடாவூர் அய்யனார். காவல் தெய்வமான அய்யனாருக்கு, "மணி ஓசை கேட்க வேண்டும் என்பதற்காக, மாட்டின் கழுத்தில் மணி, சலங்கை கட்டி, இக்கிராமத்தினர் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வண்டியில் பயணம் செய்து, வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். வழிபாட்டிற்கு புறப்படும் முன், புதூர் கிராம கோவிலில் குறிபார்த்து, "சாமி உத்தரவிட்டால் மட்டுமே 45 கி.மீ., தூரம் சென்று, அய்யனாருக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபடுவர். பின்னர், சிவகங்கை அருகேயுள்ள கூத்தாண்டத்தில் கறி சமைத்து சாப்பிடுவர். எஞ்சியவற்றை, புதூர் கிராமத்திற்கு எடுத்துச் சென்று, அங்குள்ள காவல் தெய்வத்திற்கு படையலிட்டு, மீண்டும் சமைத்து சாப்பிடும் பழக்கம், பல தலைமுறையாக தொடர்கிறது. நேற்றும், இக்கிராம மக்கள் வழிபாட்டிற்காக, மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபட்டனர். புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் கூறுகையில், ""குலதெய்வ வேண்டுதலுக்காக மணி, சலங்கை ஓசையுடன் மாட்டுவண்டியில் செல்கிறோம். வசதி இருந்தாலும் வாகனங்களில் செல்வதில்லை. எங்கள் முன்னோர் சொல்லியபடி வேண்டுதல் செய்கிறோம். மாட்டுவண்டி இல்லாவிட்டாலும், வாடகைக்கு எடுத்தாவது வேண்டுதல் நிறைவேற்றுவோம், என்றார்.