பதிவு செய்த நாள்
18
ஜூலை
2011
10:07
பழநி : பழநி ஐவர்மலையில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியது: இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மூலம், சமண முனிவர்கள் இப்பகுதியை அயிரை (சிறிய) மலை என, பெயரிட்டதற்கான சான்று உள்ளது. பின், ஐவர் மலையாக மருவியுள்ளது. இம்மலை தொடர்பான தகவல்கள், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் உள்ளன. மேற்குப்புறத்தில், தென்மேற்கு திசை நோக்கிய இயற்கையான பாறைத்தடுப்பு உள்ளது. இதை, கி.பி.12ம் நூற்றாண்டு (சமணர் காலம்) முதல், சத்திரமாக (சாவடி) பயன்படுத்தியுள்ளனர். அயிரை மலையைச் சார்ந்த கொழுமம் பெருவழிப்பாதை என, பழநி மலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. மதுரையில் துவங்கும் இப்பெருவழி, மேற்கு நோக்கிய பாதையில் கொழுமம் வழி, கோழிக்கோடு சென்றடைந்துள்ளது. அரபிக்கடல் வழி, பாரசீகம், ரோம் ஆகிய நகரங்களுக்கு போக்குவரத்து இருந்துள்ளது. சங்க கால வணிகர்கள் இப்பெருவழியை பயன்படுத்தியுள்ளனர். சமணர்களின் கல்குகை, முதுமக்கள் தாழி, வட்டக்கல் அமைவு போன்றவற்றின் அருகே, இயற்கையான பாறைத்தடுப்பின் மீது வட்ட வடிவ சத்திர அமைப்பு உள்ளது. பின்னர், கி.பி.16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த (கொங்குச் சோழர், நாயக்கர் கால) செங்கல் தற்போதும் உள்ளது. இதன் மூலம் 2,000 ஆண்டுகளாக, சத்திரம் பயன்பாட்டில் இருந்ததை உறுதிப்படுத்தலாம். அகழாய்வு நடத்தினால், தொன்மையான தகவல்களைப் பெற முடியும். இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.