பதிவு செய்த நாள்
14
ஆக
2015
11:08
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில், விநாயகர் தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில், விநாயகர், மாரியம்மன் ஸ்வாமி கோவில்கள் உள்ளன. கடந்த, 6ம் தேதி, மாரியம்மன் ஸ்வாமிக்கு, சக்தி அழைத்து, காப்பு கட்டுதலுடன், ஆடி மாத தேர்த்திருவிழா துவங்கியது. 7ம் தேதி, மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல், 10ம் தேதி, கருப்பையா ஸ்வாமிக்கு பொங்கல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 11ம் தேதி, செல்லியம்மன், மருதையான் ஸ்வாமிக்கு பொங்கல் வைத்தனர். நேற்று முன்தினம், 12ம் தேதி, மாலை 3 மணியளவில், விநாயகர் ஸ்வாமி தேர் வடம் பிடித்து இழுத்தனர். நேற்று, மதியம் 12 மணியளவில், அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆத்தூர், தளவாய்பட்டி சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று, 14ம் தேதி, ஆடி வெள்ளியொட்டி, மதியம் 1 மணியளவில், மாரியம்மன் ஸ்வாமி, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, 15ம் தேதி, மஞ்சள் நீராட்டுதலுடன் விழா முடிவடைகிறது.