பதிவு செய்த நாள்
17
ஆக
2015
12:08
கரூர்: கரூரில் நடுநாயகமாக விளங்கும் பசுபதீஸ்வரர் கோவிலில் அலங்காரவள்ளி, சவுந்திரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரருக்கு தெய்வத்திருமண விழா கோலாகலமாக நடந்தது. கருவூர் மகா அபிஷேகக் குழு சார்பில், 17ம் ஆண்டு தெய்வத்திருமண விழா கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்தது. ஆடிப்பூரத்தையொட்டி, நேற்று காலை, 10.30 மணிக்கு கரூர் கல்யாண பசுபதீஸ்வருக்கும் அலங்காரவள்ளி, சவுந்திரநாயகிக்கும் தெய்வத்திருமணம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை, 4 மணியளவில் கணபதி வழிபாடு, ராஜகோபுரத்திற்கு பிரமாண்ட மாலை சாத்துதல், கரூவூர் பெருமாள் கோவிலுக்கு பெண் வீட்டு சீர் தட்டு அழைத்தல், மாலை, 6 மணி முதல், 9 மணி வரை, கரூர் அரசு இசைப்பள்ளி சார்பில், தேவார பன்னிசையை குமாரசாமி நாதன் பாடினார். நேற்று காலை, 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை, 7.30 மணிக்கு கரூர் ஸ்ரீநிதி கார்த்திகேயன் விணை இசை நிகழ்ச்சி நடந்தது. தெய்வத்திருமணத்தை முன்னிட்டு தேவராட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புலி ஆட்டம், ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மதியம் வரை முன்னிட்டு, பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.