பதிவு செய்த நாள்
18
ஆக
2015
02:08
1. கத்வா ஸாந்தீபநிம் அத சதுஷ்ஷஷ்டி
மாத்ரை: அஹோபி:
ஸர்வஜ்ஞ: த்வம் ஸஹ முஸலிநா
ஸர்வ வித்யா க்ருஹீத்வா
புத்ரம் நஷ்டம் யம நிலயநாத்
ஆஹ்ருதம் தக்ஷிணார்த்தம்
தத்வா தஸ்மை நிஜ புரம் அகா:
நாதயந் பாஞ்சஜன்யம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அனைத்தும் அறிந்தவன் (ஸர்வஜ்ஞன்) ஆக இருந்தாலும். பலராமனுடன் சேர்ந்து ஸாந்தீபநி என்ற முனிவரிடம் கல்வி கற்கச் சென்றாய். அனைத்து வித்யைகளையும் அறுபத்து நான்கு நாட்களிலேயே கற்றுக்கொண்டாய். முன்பு ஒரு நாள் இறந்து போய் விட்டிருந்த அவரது மகனின் உயிரை யமலோகத்திற்குச் சென்று, அங்கிருந்து மீட்டுக் கொடுத்தாய். அதனை உனது குரு தட்சணையாகச் செலுத்தினாய். பின்னர் பாஞ்ச ஜன்யம் என்னும் உனது சங்கை ஊதிக்கொண்டே மதுராவிற்குத் திரும்பினாய்.
2. ஸ்ம்ருத்வா ஸமருத்வா பசுப ஸுத்ருச:
ப்ரேம பார ப்ரணுந்நா:
காருண்யேந த்வம் அபி விவச:
ப்ராஹிணோ: உத்தவம் தம்
கிஞ்ச அமுஷ்மை பரம ஸுஹ்ருதே
பக்த வர்யாய தாஸாம்
பக்தி உத்ரேகம் ஸகல புவநே
துர்லபம் தர்சயிஷ்யந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன் மீது கொண்டிருந்த ப்ரேம பக்தியால் கோபிகைகள் உருகுவார்களே என்று நினைத்து நினைத்து நீ உன் நிலையை இழந்தாய். அவர்களது பக்தியைப் போன்று இந்த உலகத்தில் யாரும் பக்தியுடன் இருக்க இயலாது. இத்தனை உன்னுடைய சிறந்த பக்தனும் நண்பனும் ஆகிய உத்தவருக்கு நீ உணர்த்த எண்ணம் கொண்டாய். எனவே அவரை ப்ருந்தாவனத்திற்குத் தூதனாக அனுப்பினாய்.
3. த்வந் மஹாத்மய ப்ரதிம பிசுநம்
கோகுலம் ப்ராப்ய ஸாயம்
த்வத் வார்த்தாபி: பஹு ஸ:
ரமயாமாஸ நந்தம் யசோதாம்
ப்ராத: த்ருஷ்ட்வா மணி மய
ரதம் சங்கிதா: பங்கஜ அக்ஷ்ய:
ச்ருத்வா ப்ராப்தம் பவத் அநுசரம்
த்யக்த கார்யா: ஸமீயு:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த உத்தவர். உனது பெருமைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் தன்மைகள் உடைய ப்ருந்தாவனத்திற்கு மாலை நேரத்தில் வந்தார். உன்னைப் பற்றிப் புகழ்ந்து கூறி நந்தகோபரையும் யசோதையையும் மகிழ்வு கொள்ளச் செய்தார். மறுநாள் காலை, கோபிகைகள் நந்தகோபரின் வீட்டு வாயிலில் நின்ற (உத்தவரின்) தேரைக் கண்டு ஐயம் கொண்டனர். உன்னிடம் இருந்து தூதர் வந்துள்ளதாகக் கேள்விப்பட்டனர். தங்கள் வீட்டு வேலைகளையெல்லாம் அப்படியே விட்டு, உத்தவரைக் காண விரைந்து வந்தனராமே!
4. த்ருஷ்ட்வா ச ஏநம் த்வத் உபம் லஸத்
வேஷ பூஷா அபிராமம்
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா தவ விலஸிதாந்
உச்சகை: தாநி தாநி
ருத்த ஆலாபா: கதம் அபி புந:
கத்கதாம் வாசம் ஊக:
சௌஜந்ய ஆதீந் நிஜ பர பிதாம்
அபி அலம் விஸ்மர ந்த்ய:
பொருள்: குருவாயூரப்பா! உனது ஆடை அணிகலன்களைப் போலவே உத்தவரும் உடைகள் அணிந்திருந்தார். அவரைக் கண்டதும் உனது லீலைகளை எண்ணி எண்ணி பேச முடியாமல் நின்றனர். இதனால் உத்தவர் தங்கள் விருந்தினர். என்பதை மறந்து, அவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை மறந்தனர். பின்னர் தங்கள் குரல் உடைந்து போன நிலையில் பின்வருமாறு கூறினார்கள்.
5. ஸ்ரீமந் கிம் த்வம் பித்ரு ஜந
க்ருதே ப்ரேஷித: நிர்தயேந
க்வ அஸௌ காந்த: நகர ஸுத்ருசாம்
ஹா ஹரே நாத பாயா:
ஆச்லேஷாணாம் அம்ருத வபுஷ:
ஹந்த தே சும்பநாநாம்
உத்மாதாநாம் குஹக வசஸாம்
விஸ்மரேத் காந்த கா வா
பொருள்: குருவாயூரப்பா! அந்த கோபிகைகள் உத்தவரிடம். ஸ்ரீமானே! எங்கள் மீது சிறிதும் இரக்கம் இல்லாத அந்தக் க்ருஷ்ணன், தனது பெற்றோர்களிடம் உங்களைத் தூது அனுப்பினானா? நகரத்துப் பெண்கள் பக்கம் சாய்ந்து விட்ட அவன் எங்கே உள்ளான்? ஹரி! நாதா! எங்களைக் காப்பாற்ற வேண்டும். சுந்தர மானவனே! அமிர்தம் போன்ற இனிய திருமேனியை உடைய உனது அரவணைப்பையும், நீ அளித்த முத்தங்களையும் கபடமான சொற்களையும் யாரால் மறக்க இயலும்? என்று புலம்பினர்.
6. ராஸக்ரீடா லுலித லுலிதம்
விச்லதத் கேச பாசம்
மந்த உத்பிந்ந ச்ரம ஜலகணம்
லோப நீயம் த்வத் அங்கம்
காருண்ய ஆப்தே ஸக்ருத் அபி
ஸமாலிங்கிதும் தர்சய இதி
ப்ரேம உந்மாதாத் புவன அதந
த்வத் ப்ரியா த்வாம் விலேபு:
பொருள்: குருவாயூரப்பா! அவர்கள் உன்னை நினைத்து, கருணைக் கடலே! க்ருஷ்ணா! ராஸ க்ரீடையின் போது உனது அழகான திருமேனி களைப் புற்றது: தலை மயிர்கள் கட்டவிழ்ந்தன; களைப்பு மிகுதியால் வியர்வை தோன்றின; இப்படிப்பட்ட உனது திருமேனி எங்கள் உள்ளத்தைக் கவர்ந்தது. இப்படிப் பட்ட திருமேனியை நாங்கள் மீண்டும் அணைத்துக் கொள்ள ஒரு முறையாவது நீ வரவேண்டும் என்று உன்மீது உண்டான காதலின் காரணமாகப் பலவாறு புலம்பினர் அல்லவா?
7. ஏவம் ப்ராயை: விவச வசநை: ஆகுலா கோபிகா: நா:
த்வத் ஸந்தேசை: ப்ரக்ருதிம் அநயத் ஸ: அத விஜ்ஞாந கர்பை:
பூய: தாபி முதித மதிபி: த்வத் மயீபி: வதூபி:
தத் தத் வார்த்தா ஸரஸம் அநயத் காநிசித் வாஸராணி
பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக கோபிகைகள் உன்னையே நினைந்து, தங்கள் நிலையை மறந்து உத்தவரிடம் மிகுந்த மன வருத்தத்துடன் பேசினார்கள். உத்தவர் அவர்களிடம் உன்னுடைய செய்திகளைக் கூறி அவர்களை சமாதானப்படுத்தினார். அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்ட கோபிகைகள் மிகவும் மகிழ்ந்து இயல்பு நிலைக்கு வந்தனர். உத்தவர் ப்ருந்தாவனத்தின் உனது லீலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே சில நாட்கள் இன்பமுடன் இருந்தாராமே!
8. த்வத் ப்ரோத்காநை: ஸஹிதம்
அநிசம் ஸர்வத: கேஹ க்ருத்யம்
த்வத் வார்த்தா ஏவ ப்ரஸரதி மித:
ஸா ஏவ ச உத்ஸ்வாப லாபா:
சேஷ்டா: ப்ராய: த்வத் அநுக்ருதய:
த்வத் மயம் ஸர்வம் ஏவம்
த்ருஷ்ட்வா தத்ர வ்யமுஹத்
அதிகம் விஸ்மயாத் உத்தவ: அயம்
பொருள்: குருவாயூரப்பா! ப்ருந்தாவனத்தின் அனைத்து வீடுகளிலும் கோபர்கள் வீட்டு வேலைகள் செய்யும்போது கூட உனது லீலைகள் பற்றிய பாடல்களையே பாடினர். உன்னைப் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் உறங்கும்போது கனவில் கூட சிந்தனையே உள்ளது அவர்கள் ஒவ்வொரு செய்கையும் உன்னைச் சுற்றியே உள்ளது. இப்படியாக ப்ருந்தாவனம் முழுவதும் உனது மயமாகவே உள்ளதைக் கண்ட உத்தவர் மிகவும் மனம் மகிழ்வு கொண்டனார்.
9. ராதாயா மே ப்ரியதமம் இதம்
மத் ப்ரியா ஏவம் ப்ரவீதி
த்வத் கிம் மௌநம் கலயஸி
ஸகே மாநிநீ மத் ப்ரியா ஏவ
இதி ஆதி ஏவ ப்ரவததி ஸகி
த்வத் ப்ரிய: நிர்ஜநே மாம்
இத்தம் வாதை: அரமயத் அயம்
த்வத் ப்ரியாம் உத்பல அக்ஷீம்
பொருள்: குருவாயூரப்பா! உத்தவர் உனது உற்ற தோழியான ராதையைக் கண்டார். அவளிடம், க்ருஷ்ணனின் அன்பானவளே! க்ருஷ்ணன் என்னுடன் பேசும்போது - உத்தவா! இவை என் ராதைக்கு மிகவும் பிடிக்கும்; நீ என் ராதையைப் போல் பேசுகிறாயே! நீ ஏன் என் ராதையைப் போல் கோபம் கொண்டு மவுனமாக உள்ளாய் - என்று கூறுவான் என்று கூறி அவளை மகிழ்வித்தார்.
10. ஏஷ்யாமி த்ராக் அநுப கமநம்
கேவலம் கார்ய பாராத்
விச்லேஷ அபி ஸ்மரண த்ருடதா
ஸம்பவாத் மா அஸ்து கேத:
ப்ரஹ்ம ஆனந்தே மிலதி ந
சிராத் ஸங்கம: வா வியோக:
துல்ய: வ: ஸ்யாத் இதி தவ
கிரா ஸ: அகரோந் நிர்வ்யதா: தா:
பொருள்: குருவாயூரப்பா! பின்னர் அவர் அந்த கோபிகைகளிடம் உனது தூது செய்தியைக் கூறினார் - நான் மீண்டும் விரைவில் அங்கு வந்துவிடுவேன். எனக்கு இங்கு பல செயல்கள் நிகழ்த்த வேண்டியுள்ளதால் இப்போது வர இயலவில்லை. நாம் பிரிந்து இருந்தாலும் என்னைப் பற்றிய நினைவு உள்ளதால் வருத்தம் அடையாதீர்கள். விரைவில் ஆனந்தம் கொள்வீர்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு சேருவதோ பிரிவதோ ஒன்றாகவே இருக்கும் - என்று கூறினார். இப்படியாக அவர்கள் மன வருத்தத்தை நீக்கினார்.
11. ஏவம் பக்தி: ஸகல புவநே
ந ஈக்ஷிதா ந ச்ருதா வா
கிம் சாஸ்த்ர ஓகை: கிம் இஹ
தபஸா கோபிகாப்ய: நம: அஸ்து
இதி ஆனந்த ஆகுலம் உபகதம்
கோகுலாத் உத்தவம் தம்
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட: குரு
புர பதே பாஹிமாம் ஆமய ஓகாத்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உத்தவர் தனது மனதில் இப்படிப்பட்ட ஒரு தீவிரமான பக்தியையும் அன்பையும் நான் வேறு எங்கும் கண்டதில்லை. சாத்திரங்களைக் கற்பதால் என்ன பயன் உள்ளது? தவம் இயற்றுவதால் என்ன பயன் உள்ளது? (இவர்களை வணங்கினால் போதுமே என்று எண்ணி) கோபிகைகளுக்கு என் பணிவான வணக்கங்கள் என்று நினைத்தார். மிகுந்த ஆனந்தத்துடன் உன்னிடம் வந்தார். நீயும் அவரைக் கண்டு (கோபிகைகளைக் கண்டது போல்) மகிழ்ந்தாய் அல்லவா? இப்படிப்பட்ட நீ, கூட்டமாக வரும் பிணிகளில் இருந்து காப்பாற்று.