பதிவு செய்த நாள்
18
ஆக
2015
02:08
1. பல ஸமேத பல அநுகத: பவாந்
புரம் அகாஹத பீஷ்மக மாநித:
த்விஜ ஸுதம் த்வத் உபாகம வாதிநம்
த்ருத ரஸா தாஸா ப்ரணநாமஸா
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னைப் பின் தொடர்ந்து பலராமன் தனது படைகளுடன் வந்தான். நீ குண்டினபுரத்தை அடைந்தபோது பீஷ்மக அரசன் உன்னை வரவேற்றான் (பீஷ்மகன் ருக்மிணியின் தந்தை). உன்னிடம் தூதனாக வந்த அந்தணன் ருக்மிணியிடம் உன்னுடைய வருகையைக் கூறினான். அவள் மிகவும் மகிழ்ந்து அவனைத் துதித்தாள்.
2. புவந காந்தம் அவேக்ஷ்ய பவத் வபு:
ந்ருப ஸுதஸ்ய நிசம்ய ச சேஷ்டிதம்
விபுல கேத ஜுஷாம் புர வாஸிநாம்
ஸருதிதை: உதிதை: அகமந் நிசா
பொருள்: குருவாயூரப்பா! அந்த நகரத்து மக்கள் உனது அழகான திருமேனியைப் பார்த்து வியந்தனர். இப்படிப்பட்ட உன்னை விடுத்து ருக்மிணியைச் சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுக்க எண்ணும் ருக்மியின் செயலைக் கேட்டு வருத்தம் கொண்டனர். இப்படியாக அந்த இரவு கழிந்தது.
3. ததநு வந்திதுத் இந்து முகீ சிவாம்
விஹித மங்கள பூஷண பாஸுரா
நிரகமத் பவத் அர்ப்பித ஜீவிதா
ஸ்வபுரத: புரதந: ஸபட ஆவ்ருதா
பொருள்: குருவாயூரப்பா! மறுநாள் காலை விடிந்தது. அப்போது உன்னிடம் தனது உயிரையே வைத்திருந்தவளும், சந்திரன் போன்று அழகான முகம் உடையவளும் ஆகிய ருக்மிணி, தனது காவலர்கள் சூழ, அனைத்து மங்கலங்களையும் அளிக்கும் பார்வதியின் கோயிலுக்குச் சென்றாள்.
4. குல வதூபி: உபேத்ய குமாரிகா
கிரி ஸுதாம் பரி பூஜ்ய ச ஸாதரம்
முஹு: அயாசத தத் பத பங்கஜே
நிபதிதா பதிதாம் தவ கேவலம்.
பொருள்: குருவாயூரப்பா! குமரியான அந்த ருக்மிணி குலப்பெண்களுடன் இணைந்து. பார்வதியை வணங்கினாள். அவள் பாதங்களில் பலமுறை விழுந்து வணங்கினாள். நீயே தனக்குக் கணவனாக அமைய வேண்டும் என்று வேண்டினாளாமே!
5. ஸமவலோக குதூஹல ஸங்குலே
ந்ருப குலே நிப்ருதம் த்வயி ச ஸ்திதே
ந்ருப ஸுதா நிரகாத் கிரிஜா ஆலயாத்
ஸுருசிரம் ருசிரம் ஜித திக் முகா
பொருள்: குருவாயூரப்பா! கோயிலில் இருந்து வெளியே வரப்போகும் ருக்மிணியைக் காண மிகவும் ஆவலுடன் மகிழ்வுடன் அரசர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். நீ அந்தக் கூட்டத்தில் சேராமல் தனியாக நின்றிருந்தாய். அந்த நேரத்தில் ருக்மிணி தனது உடலில் உள்ள ஒளியால் அனைத்து திசைகளும் ப்ரகாசிக்கும்படியாக கோயிலில் இருந்து வெளியில் வந்தாள்.
6.புவந மோஹந ரூப ருசா ததா
விவசித அகில ராஜ கதம்பயா
த்வம் அபி தேவ கடாக்ஷ விமோக்ஷணை:
ப்ரமதயா மதயாஞ் சக்ருஷே மநாக்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த உலகையே மயங்க வைக்கும் அழகான உடலை உடையவளாக ருக்மிணி இருந்தாள். அவள் தனது பார்வையை அந்த அரசர்கள் மீது பதித்தாள். இதனால் அனைவரும் பரவசம் அடைந்தனர். நீயும் அந்த ருக்மிணியின் கடைக்கண் பார்வையால் மிகுந்த மயக்கம் அடைந்தாயாமே!
7. க்வநு கமிஷ்யஸி சந்த்ர முக இதி தாம்
ஸரஸம் ஏத்ய கரேண ஹரந் க்ஷணாத்
ஸமதிரோப்ய ரதம் த்வம் அபாஹ்ருதா
புவிததா: விதத: நிநத: த்விஷாம்
பொருள்: குருவாயூரப்பா! நீ அவள் அருகில் சென்று, சந்திரனைப் போன்ற அழகிய முகம் படைத்தவளே! எங்கு செல்கிறாய்? என்று அன்புடன் கேட்டாய். விரைந்து கைகளைப் பிடித்தாய். ஒரு நொடிப் பொழுதில் அவளைத் தூக்கி உனது தேரில் அமர வைத்தாய். பின்னர் அங்கிருந்து விரைவாகச் சென்று விட்டாய். இதனால் எழுந்த பகை அரசர்களின் கூச்சல் உலகம் எங்கும் கேட்டது.
8. க்வ நு கத: பசுபால: இதி க்ருதா
க்ருத ரணா: யதுபி: ச ஜிதா: ந்ருபா:
ந து பவாந் உத்சால்யத் தை: அஹோ
பிசுநகை: சுநகை: இவ கேஸரீ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த அரசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, எங்கே அந்த இடையன்? என்று கேட்டுக்கொண்டே யாதவர்களுடன் மோதினர். ஆனால் தோற்கடிக்கப்பட்டனர். நாய்கள் கூட்டத்தைக் கண்டு கம்பீரமாக நிற்கும் சிங்கம் போன்று நீ அவர்களைப் பார்த்து அசையாமல் நின்றாயாமே!
9. ததநு ருக்மிணம் ஆகத ஆஹவே
வதம் உபேக்ஷ்ய நிபத்ய விரூபயந்
ஹ்ருத மதம் பரிமுச்ய பல உக்திபி:
புரம் அயா: ரமயா ஸஹ காந்த்யா
பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் உன்னுடன் ருக்மி யுத்தம் செய்ய வந்தான். நீ அவனைக் கட்டி வைத்து அவனது முகத்தை அழகில்லாமல் செய்தாய். அதன் பின்னர் பலராமன் கூறியதால் அவனை விடுவித்தாய். அதன் பின்னர் மஹாலக்ஷ்மியான ருக்மிணியை அழைத்துக் கொண்டு துவாரகைக்கு விரைந்தாயாமே!
10. நவ ஸமாகம லஜ்ஜித மாநஸாம்
ப்ரணய கௌதுக ஜ்ரும்பித மந்மதாம்
அர மய: கலு நாத யதா ஸுகம்
ரஹஸி தாம் ஹஸித அம்சு லஸந் முகீம்
பொருள்: குருவாயூரப்பா! அந்த ருக்மிணியின் முகமும் மனதும் உன்னைப் போன்றவனின் புதிய சேர்க்கையால் நாணம் கொண்டன. உன் மீது கொண்ட அன்பாலும் மகிழ்வாலும், காமம் மேலும் வளர்ந்தது. இதனால் அவள் முகத்தில் எழிலான புன்னகை அரும்பியது. நீ அவளைத் தனிமையில் இன்பமாக இருக்கும்படி செய்தாயாமே!
11. விவித நர்மபி: ஏவம் அஹ: நிசம்
ப்ரமதம் ஆகலயந் புந: ஏகதா
ருஜு மதே: கில வக்ர கிரா பவாந்
வர தநோ: அதநோத் அதிலோலதாம்
பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக நீ இரவும் பகலும் உனது வேடிக்கை நிறைந்த காதல் வார்த்தைகளால் ருக்மிணியை மகிழ வைத்தாய். இப்படியிருக்கும்போது ஒரு நாள் நீ கள்ளம் கபடம் அறியாத அழகான ருக்மிணியை, உனது கபடமான வார்த்தையால் நடுங்க வைத்தாய் அல்லவா? (அந்த வரிகள் பாகவதத்தில் - ருக்மிணி. நீ அரசு இல்லாத என்னை ஏன் திருமணம் செய்தாய். வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாமே - என்பதாகும்.)
12. தத் அதிகை: அத லாலத கௌசலை:
ப்ரணயிநீம் அதிகம் ஸுகயந் இமாம்
அயி முகுந்த பவத் சரிதாநி ந:
ப்ரகத தாம் கத தாந்திம் அபாகுரு
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முகுந்தா! அதன் பின்னர் ருக்மிணியை முன்பைவிட அதிகமாகக் கொண்டாடிப் பேசி அவளை மகிழ்வு கொள்ளச் செய்தாய். இப்படியாக உனது அற்புதமான சரிதங்களையும் லீலைகளையும் கூறும் எங்களுக்கு. எங்கள் நோய்களால் உண்டாகும் துன்பத்தை விலக்க வேண்டும்.