பதிவு செய்த நாள்
15
நவ
2025
09:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.
காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரகத்துடன், காஞ்சிபுரம் காமாட்சியம்மனின் ஜென்ம நட்சத்திரமான ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் நேற்று ஐப்பசி பூர பால்குட நடந்தது.
விழாவையொட்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இருந்து, மாலை 4:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது.
இதில், பம்பை, சிலம்பு கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடியபடி முன்னே செல்ல அதைதொடர்ந்து, திரளான பெண்கள், பால்குடத்தை ஏந்தியபடி பக்திபரவசத்துடன் ஊர்வலமாக காமாட்சியம்மன் கோவில் சென்றனர்.
அங்கு அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து காமாட்சியமமன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவிற்கான ஏற்பாட்டை காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், கோவில் மணியகாரர் சூரியநாராயணன், கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான ராஜலட்சுமி, காமாக்ஷி அம்பாள் தேவஸ்தான ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீர்கள், தேவஸ்தான சிப்பந்திகள், ஐப்பசி பூரம் விழா குழுவினர் செய்திருந்தனர்.