பதிவு செய்த நாள்
26
ஆக
2015
12:08
கும்பகோணம்: சுவாமிமலை முருகன் கோவிலுக்கு, எட்டு லட்சத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட, பத்து கோபுர கலசங்கள் கொண்டு வரப்பட்டது. அறுபடை வீடுகளில், நான்காவது படை வீடாக, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலில், செப்டம்பர், 9ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவிலில் கோபுர கலசங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மலேஷியாவை சேர்ந்த பக்தர் டத்தோ ராஜசேகரன் குடும்பத்தினர், எட்டு லட்சம் மதிப்பீட்டில் கோவில் கோபுர கலசங்களை உபயமாக வழங்க முன் வந்தனர். ராஜ கோபுரத்திற்கு, ஏழு கலசங்கள், மூன்றரை அடி உயரத்திலும், ஸ்வாமி, அம்பாள், பாலசுப்பிரமணியன் கோவில் கோபுரங்களுக்கு, மூன்றேகால் அடி உயரத்திலும் மொத்தம், பத்து தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் வழங்க முன் வந்தனர். இந்த கலசங்கள் அனைத்தும், கும்பகோணம் அங்காளம்மன் சிற்ப கூடத்தில் கடந்த, மூன்று மாதங்களாக வடிவமைக்கப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, கோவிலில் வசந்த மண்டபத்தில், வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர், 8ம் தேதி கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, 9ம் தேதி புனித நீர் ஊற்றப்பட உள்ளது.