பதிவு செய்த நாள்
08
செப்
2015
02:09
ரோமப் பேரரசுக்கு உட்பட்ட யூதேயா நாட்டை ஏரோது மன்னன் ஆட்சி செய்து வந்தான். இந்த நாட்டில் சகரியா என்பவர் வசித்தார். இவரது மனைவி எலிசபெத். பக்தி மிக்க இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு கட்டத்தில் முதுமையும் அடைந்தனர். கடவுள் அருள் இருந்தால் அசாத்தியமான செயல்களெல்லாம் சாத்தியம் என்பதற்கேற்ப, ஒருநாள் சகரியா தேவாலயத்தில் தூபமிட்டுக் கொண்டிருந்தபோது, கபிரியேல் என்ற தேவதூதர் தோன்றினார். அவரைக் கண்ட சகரியா பயந்தார். அந்த தூதர் அவரிடம், சகரியா.. பயப்படாதே. உன் மனைவி உமக்கு ஒரு குமாரனைப் பெறுவார். அவருக்கு யோவான் (ஜான்)என பெயரிட வேண்டும் என்றார்.அதன்படி, எலிசபெத் வயதான காலத்திலும் கருவுற்றார். எலிசபெத்தின் உறவுக்காரப் பெண்ணே மரியாள் (மேரி). அவளுக்கும், யோசேப் (சூசையப்பர்) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன் ஒருநாள் கபிரியேல் அவள் முன் தோன்றி, கிருபை பெற்றவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே இருக்கிறார் என்றதும், மரியாள் சிந்தனையுடன் நின்றாள். மரியாளே! பயப்பட வேண்டாம். நீ கடவுளிடத்தில் கிருபை பெற்றாய். கர்ப்பம் தரித்து ஒரு குழந்தையைப் பெறுவாய். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவாய் என்றார். இது எப்படி முடியும்? நான் கன்னியாக இருக்கிறேனே! என்றாள்.பரிசுத்த ஆவி உன் மேல் வரும். தேவகுமாரன் உம்மிடத்தில் பிறப்பார். கடவுளால் ஆகாதது ஏதுமில்லை என்று தூதர் சொன்னதும், அதற்கு மரியாள், இதோ, நான் கர்த்தரின் அடிமை. உம்முடைய வார்த்தையின் படி எனக்கு ஆகக் கடவது, என்றுதும் கபிரியேல் மறைந்தார். சகரியாவின் மனைவி கருவுற்றிருப்பதை அறிந்த மரியாள், அவளை வாழ்த்தச் சென்றாள். அவளது வாழ்த்துதலைக் கேட்டு கருவில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.எலிசபெத் மரியாளிடம், மரியாளே! பெண்களுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள். உன் கர்ப்பத்தின் கனியும் ஆசிர்வதிக்கப்பட்டது. நீ என் ஆண்டவரின் தாய். நீ என்னைப் பார்க்க வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! இதோ உன் வாழ்த்தொலி, என் காதில் விழுந்த உடனே கருவிலுள்ள என் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது, என்றாள்.இப்படி யோவான் பிறக்கும் முன்பே, மரியாளிடம் ஆசிர்வாதம் பெற்றவராய் இருந்தார்.