உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி உற்சவம் நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீகனகவள்ளி தாயார் சமேத ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. அதனையொட்டி கடந்த 5ம் தேதி விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. மறுநாள் காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. இரவு 7: 30 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி உறியடியை துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உறியடித்தனர். இரவு 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலர் வழக்கறிஞர்கள் மணிராஜ், அன்பழகன், கோதண்டபாணி, மோகன்ராஜ், முக்கியஸ்தர்கள் பாபு, நரேஷ், குருராஜ், கலியன், முத்துகிருஷ்ணன், கணேஷ்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.