பதிவு செய்த நாள்
09
செப்
2015
06:09
வத்திராயிருப்பு: சதுரகிரிமலை பிரதோஷ வழிபாட்டிற்காக நாளை (செப். 10ல்) திறக்கப்படுகிறது. சதுரகிரிமலையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பக்தர்கள் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு கடந்த 4 மாதங்களாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்காக மட்டும் தலா 3 நாட்கள் மட்டும் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். உதாரணமாக, அமாவாசை வழிபாட்டிற்கு முதல்நாள், அமாவாசை தினம், அதற்கு மறுநாள் என தொடர்ந்து 3 நாட்கள் மலை திறக்கப்பட்டது. ஆனால் மலை திறப்பதற்கு முதல்நாள் பிரதோஷ தினம் வந்து விடுகிறது. பிரதோஷ வழிபாடு சிவஸ்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்றது. எனவே சதுரகிரி மலைக்கு பிரதோஷ வழிபாட்டிற்கும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டுவிடுகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, பெங்களூர் என வெகு தொலைவிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் மலைக்கு வரும் பக்தர்கள், மலையின் அடிவாரமான தாணிப்பாறையில் உள்ள நுளைவாயில் மூடப்பட்டிருப்பதால் அதனை திறந்துவிடுமாறு வனத்துறையினர், போலீசாரிடம் கெஞ்சுகின்றனர். சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால் ஒவ்வொரு பிரதோஷதினத்திலும் பக்தர்களை சமாளிக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதையும் மீறி பல்வேறு பிரச்சனைகள் அடிவாரத்தில் ஏற்பட்டன. போலீசார் ஒவ்வொரு பிரதோஷதினத்திலும் மதுரை, விருதுநகர் மாவட்ட கலக்டர்களிடம் பேசி சிறப்பு அனுமதி பெற்று பக்தர்களை அனுமதித்து வந்தனர். இதனை தவிர்ப்பதற்காக பிரதோஷதினத்திலும் பக்தர்கள் மலைக்கு செல்ல இருமாவட்ட நிர்வாகங்கள் அனுமதித்துள்ளன. இதனால் பிரதோஷதினமான நாளை (செப். 10ல்) சதுரகிரிமலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 4 தினங்களுக்கு பின் செப்.13 மாலையுடன் மூடப்படுகிறது. இனிவரும் அனைத்து பிரதோஷதினங்களிலும் பக்தர்கள் தாராளமாக மலைக்கு சென்றுவரலாம். அதற்கேற்ப 3 நாள் மலைதிறப்பு 4 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.