மற்றவர்களின் உடல்பலம், பணபலத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். நான் வெல்லவே பிறந்திருக்கிறேன் என்ற தீர்மானத்துடன் வாழ்வில் எதிர்நீச்சல் போடுங்கள். வெற்றிப்பாதையில் நம்மை செலுத்த வல்லவர் கடவுள் மட்டுமே. அவரை நோக்கி மனதை திருப்பினால் வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் நிறைந்திருக்கும். புதிய முயற்சியில் ஈடுபடும் போது, கடந்த கால அனுபவம் கற்றுத் தந்த பாடத்தை மறக்காதீர்கள். எத்தனை முறை தோற்றாலும் முயற்சியை கைவிடாதீர்கள்.தோல்வி என்பது தற்காலிகமான ஒன்றே. உலகம் வேண்டுமானால் ஒருவனை தோல்வியாளனாக கருதலாம். ஆனால், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருப்பவனுக்கு வெற்றி கிடைத்தே தீரும். நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள்.
கடவுளின் ஒப்பற்ற படைப்பாக இருக்கும் நம்மைப் போல வேறொருவர் உலகில் இல்லை. இதை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள்.தினமும் இரவு துõங்கும் முன், அன்றைய நாளில் செய்த பணி அனைத்தையும் பட்டியலிடுங்கள். இது உங்களை நீங்களே திருத்திக் கொள்ளவும், திட்டமிடவும் துõண்டுகோலாக இருக்கும். வேகத்துடன், விவேகத்தையும் மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே நெருக்கடி நேரத்தில் மனிதனுக்கு தக்க பாதுகாப்பாக அமையும்.மகான்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். வாழ்வில் சோதனை குறுக்கிட்டாலும் மனம் தளராமல் அவர்கள் போராடி வென்றதை உணர முடியும். எந்த வேலையையும், இன்று போகட்டும்; நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். காலம் தாழ்த்தினால் நம்மை நாமே ஏமாற்றுவதாக ஆகி விடும். பிறர் கூறும் பழிச் சொற்களை பொருட்படுத்த வேண்டாம். யார் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள். அமைதியும், உறுதியும் உள்ளத்தில் இருந்தால் நீங்கள் ஒரு வெற்றி வீரரே.வேலைக்காக வழிபாட்டைப் புறக்கணிப்பது கூடாது. பணியில் ஈடுபடும் போதும் ஆழ்மனம் கடவுளின் சிந்தனையில் இருக்க வேண்டும்.எண்ணம் முளைவிடும் விதை போன்றது. நன்மை, தீமையை விளைவிக்கும் இருவித எண்ணங்கள் உலகில் இருக்கின்றன. மனதிற்குள் எதை அனுமதித்தாலும் அதற்கான பலனை அளிக்கத் தொடங்கும். கடவுளை சிந்தனை செய்யும் பணி தியானத்திற்கு ஈடானது. இதனால், மனம் ஒருமுகப்பட்டு பணியை சிறப்பாகவும், விரைவாகவும் செய்ய முடியும். கூச்சல், குழப்பம் உண்டாகும் சூழ்நிலையில் இருந்து விலகி இருங்கள். அமைதி பெற வேண்டுமானால் தனிமையில் அமர்ந்து கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள்.