சிங்கம்புணரி: சிங்கம்புணரி வீரையா கோயில் காளை கால்சிலம்பில் மழை அறியும் விழா நடந்தது. கடந்த 15 ந்தேதி கோயில் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. ஒரு வாரம் இரவு சிறப்பு பூஜை நடந்தது. முதல் நாள் புரவி எடுப்பு விழா நடந்தது. குலாலர் தெருவிலிருந்து புரவி சந்திவீரன் கூடத்திற்கு வந்து அங்கிருந்து சேவுகப்பெருமாள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. வீரையா கோயிலில் காளையின் முன்காலில் தலா 2 சிலம்புகள் அணிவித்து 40 அடி நீள வடத்தில் கோயில் காளை இணைக்கப்பட்டது. வீரையா கோயில்,பேச்சியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை,ஆராதனை நடந்தது. இரவு கோயில் காரணக்காரர் கபிலன், மக்கள் மழை அறிய,காளை இணைக்கப்பட்ட வடத்தை வெட்டிவிட்டார். காளை அதன் எல்லையான சீரணி அரங்கு வரை ஓடியது. கால் சிலம்பிலிருந்து மூன்று முத்துக்கள் சிதறிவிழுந்ததால் இந்த ஆண்டு முழு விளைச்சல் அடையாளம் காட்டியதாக மக்கள் மகிழ்சியடைந் தனர். காளை ஓடும்போது எத்தனை முத்து சிதறி கீழே விழுகிறதோ அதற்கேற்ப, மழை பெய்யும் என்பது இக்கிராம விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.