பதிவு செய்த நாள்
24
அக்
2015
11:10
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் 3 கோடி ரூபாய் செலவில் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் அக்., 26 ல் துவக்கப்படுகிறது. தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் சிவன் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில் உள்ளன. இந்த கோயில்கள் 1985, மற்றும் 2003 ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பணி உபயதாரர் கமிட்டி தலைவர் ராஜா சங்கரலிங்கம் தெரிவித்தாவது: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும், என்பதை கருத்தில் கொண்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிவன் கோயிலில் கோபுரங்கள், விமானங்கள், பிரகார தளங்கள், மடப்பள்ளி,மண்டபம், வாகனங்கள் சீரமைக்கப்படுகின்றன. கர்ப்பகிரக வாயில் வெள்ளியால் செய்யப்படவுள்ளது. பெருமாள் கோயிலில் புதியதாக லட்சுமி நரசிம்மர் சன்னிதி அமைக்கப்படுகிறது. ஆண்டாள் சன்னிதி இட மாற்றம் செய்யப்படவுள்ளதுஸ்ரீதேவி, பூதேவி,ராஜகோபுரம் சீரமைப்பு பணிகள் நடக்கவுள்ளது. அக்.26 ல் காலையில் சிவன் கோயில் திருப்பணி துவக்க விழாவில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், சிந்தலக்கரை ராமமூர்த்தி சுவாமிகள் பங்கேற்கின்றனர். பெருமாள் கோயிலில், ஆழ்வார் திருநகரி ஜீயர், மற்றும் கோபால வல்லி தாசர் பங்கேற்கின்றனர். புனரமைப்பு பணிகள் ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளுக்கு 3 கோடி ரூபாய் திரட்டப்படவுள்ளது. திருப்பணிக்குழுவில் முக்கிய பிரமுகர்கள் 28 பேர் இடம் பெற்றுள்ளனர், என அவர் தெரிவித்தார்.