பதிவு செய்த நாள்
26
ஜூலை
2011
12:07
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று ஆடிக் கிருத்திகை விழா, கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பகல் 12 மணிக்கு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், பால் காவடி, வேல்காவடி, புஷ்ப காவடி ஆகியவற்றை சுமந்து வந்தனர். பலர் அலகு குத்தி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பகல் 1 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இரவு 8.30 மணிக்கு, சுவாமி வீதியுலா நடந்தது.ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, பரணி அபிஷேகம், நள்ளிரவு 12 மணிக்கு விபூதி காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு, மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மாலை 3 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், இரவு 9 மணிக்கு கோடை ஆண்டவர் வீதியுலா நடந்தது. ஸ்ரீபெரும்புதூர், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகள் எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளிலிருந்து, வல்லக்கோட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.திருப்போரூர்: கந்தசுவாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், மொட்டை அடித்து, சரவணப்பொய்கையில் நீராடி, சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பலர் ஊர்வலமாக காவடி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5 மணிக்கு, உற்சவருக்கு மகா அபிஷேகம், இரவு கந்தப்பெருமான், வள்ளி தெய்வயானையுடன் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.மூலவர் உருவப்படம் பக்தர்களுக்கு வினியோகம்ஆடிக்கிருத்திகையையொட்டி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, தினமலர் சார்பில், அந்தந்த கோவில் மூலவர் வண்ண உருவப் படம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள், வினியோகம் செய்யப்பட்டன.