பதிவு செய்த நாள்
26
ஜூலை
2011
12:07
திருவள்ளூர் : திருவள்ளூர் கோலம் கொண்ட அம்மன் கோவில் ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்தது.திருவள்ளூர், முகமதலி தெருவிலுள்ள, கோலம் கொண்ட அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், ஆடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு ஆடித் திருவிழா, 22ம் தேதி, காலை 5 மணிக்கு, அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள், 23ம் தேதி, காலை 6 மணிக்கு அம்மனுக்கு, மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு, அம்மனுக்கு குங்கும காப்பும், விநாயகருக்கு சந்தன காப்பும் நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம், காலை 7 மணிக்கு அம்மனுக்கு பழங்கள் மற்றும் சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. காலை 9 மணிக்கு, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் காப்பும், விநாயகருக்கு சந்தனக் காப்பும் நடந்தது. மாலை 6 மணிக்கு, வேம்புலி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள், தங்கள் உடலில் அலகு குத்தி அம்மனை இழுத்து வந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள், தங்கள் உடலில் அலகு குத்தி, நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து வீரராகவர் கோவில் குளத்திலிருந்து, ஏராளமான பக்தர்கள், தங்கள் கைகளில் தீச்சட்டி ஏந்தி கோவிலுக்கு வந்தனர்.இரவு 8 மணிக்கு, உற்சவர் கோலம் கொண்ட அம்மன், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்தார். இரவு நாடகம் நடந்தது.