பதிவு செய்த நாள்
26
அக்
2015
05:10
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடந்தது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் பிரசித்து பெற்றது. ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
கடந்த, 2010ம் ஆண்டு ஜூலை மாதம்,16ம் தேதி ஆழித்தேரோட்டம் நடந்தது. அதன்பின்,அதே ஆண்டு அக்டோபர் மாதம், தியாகராஜசுவாமி கோவில் திருப்பணி முகூர்த்தம் நடந்தது. திருப்பணி துவங்கியதை அடுத்து, 2011ம் ஆண்டு முதல், ஆழித்தேரோட்டம் நடைபெற வில்லை. தியாகராஜசுவாமி கோவில் திருப்பணியுடன்,2.18 கோடி ரூபாய் செலவில், ஆழித்தேர்,சுப்ரமணியர் தேர் புதுப்பிக்கும் பணியும் துவங்கின. பணிகள் முடிந்து, 2015,அக்.,26ல், ஆழித்தேர், சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி,ஆழித்தேர் வெள்ளோட்டத்தை ஒட்டி, 25ம்தேதி காலை,7:00 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,மஹா கணபதி ேஹாமம், வாஸ்துசாந்தி போன்ற பூஜைகள் நடைபெற்றன.நேற்று காலை,6:00 மணிக்கு இரண்டாம் கால யாகம், 9:00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை, 9:15 மணிக்கு ஆழித்தேர் பிரதிஷ்டை நடைபெற்றது.
காலை,9:30 மணியளவில்,சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் துவங்கியது.காலை,9:45 மணிக்கு ஆழித்தேர் வெள்ளோட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஆழித்தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆழித்தேரின் பின்புற சக்கரங்கள் புல்டோசர் இயந்திரங்கள் மூலம் தள்ளப்பட்டன. ஆழித்தேர், கீழவீதி,தெற்குவீதி,மேலவீதி,வடக்குவீதி வழியாக வலம் வந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆழித்தேர் வெள்ளோட்டத்தால், திருவாரூர் நகரமே விழாக்கோலமாக காட்சி அளித்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.